×

திருமாநிலையூர் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பினால் சரக்கு வேன் பள்ளத்தில் சிக்கியது போக்குவரத்து கடும் பாதிப்பு

கரூர்,டிச.20:   கரூர் திருமாநிலையூர் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பினால் ஏற்பட்ட  பள்ளத்தில் சரக்கு வேன் சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு  ஏற்பட்டது.
 கரூரில் இருந்து திருமாநிலையூர் வழியாக ராயனுார்,  கோடங்கிப்பட்டி, ஈசநத்தம், திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. மேலும், திருச்சி சாலையில்  திருமாநிலையூர் பகுதிக்கு பிரியும் சாலையில் குறிப்பிட்ட துாரம் வரை  சாலையின் இருபுறமும் குடியிருப்புகள் உள்ளன. இதனால், இதன் வழியாக செல்லும்  வாகனங்கள் அனைத்தும் மெதுவாகவே சென்று வருகிறது. இந்நிலையில்,  திருமாநிலையூர் சாலையில் 3 இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு  ஏற்பட்டு மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரவு நேரங்களில் வாகனங் களில்  செல்பவர்கள் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதனைத்  தொடர்ந்து, நேற்று முன்தினம் மெகா பள்ளத்தில் மண்கள் போட்டு மூடப்பட்டது.

இந்நிலையில்,  நேற்று காலை 6 மணியளவில், ராயனுார் பகுதியில் இருந்து கரூர் நோக்கி வந்த  சரக்கு வேன் ஒன்று பள்ளத்தில் இறங்கியது. மண் பரப்பிய நிலையில் இருந்ததால் வேனின் டயர் பள்ளத்தில் மாட்டிக்கொண்டு நடுசாலையில் நின்றது. இதனால்,  இந்த சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒரு மணி  நேரத்துக்கு பிறகு, பொக்லைன் வரவழைக்கப்பட்டு வேன் மீட்கப்பட்டது. அதன்  பிறகு போக்குவரத்து சீரானது. இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர்  குழாயில் உடைப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்படுவது சகஜமாக நடைபெற்று வருகிறது.  எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் வகையில் நகராட்சியினர் பணிகளை  மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : drinking water tunnel ,road ,Thirumannidayoor ,
× RELATED கோழிக்கோடு பீச் சாலையில் கார்...