×

இயற்கை காட்சி மற்றும் ஏரியின் அழகை பழவேற்காடு கலங்கரை விளக்கத்தில் இருந்து பார்வையிட அனுமதி மறுப்பு: சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி

பொன்னேரி டிச.20: பொன்னேரி அருகே பழவேற்காடு பகுதியில் உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து கடல் மற்றும் ஏரி பகுதியை பார்வையிட அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு  ஏரியும் கடலும் இணையும் முகத்துவாரப்பகுதியாகும். இது சென்னையின் வடக்கு கடலோரத்தில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து 60 கிமீ தூரமும், எளாவூரில் இருந்து 3 கிமீ தூரத்திலும், வங்காளவிரிகுடா கடல் பகுதி மற்றும் பழவேற்காடு ஏரியை பிரிக்கும் ஹரிக்கோட்டா அருகே அமைந்துள்ளது.இங்கு 1502ம் ஆண்டு விஜயநகர மன்னர்களின் துணையுடன், போர்ச்சுகீசியர்கள் வணிக புறமையத்தை துவங்கினர். பின்னர், தங்களுக்காக அங்கு கோட்டை கட்டி வசித்தனர். 1609ம் ஆண்டு நடந்த போரில், ஒல்லாந்தரிடம் இந்த கோட்டையை இழந்தனர். இதையடுத்து அந்த கோட்டை, 1690ம் ஆண்டு வரை ஒல்லாந்தரின் கைவசமாக இருந்தது.அதன்பிறகு அந்த கோட்டை பலரிடம் கைமாறி, கடைசியாக 1825ம் ஆண்டு பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் வசம் சென்றது. இதைதொடர்ந்து இங்கு டச்சு கோட்டை, டச்சு தேவாலயம் கட்டினர். இன்றும் அந்த தேவாலயம் மற்றும் கோட்டை பிரபலமாக பேசப்படுகிறது. ஆனால், அதை முறையாக பராமரிக்காததால், பாழடைந்து காணப்படுகிறது.
இதே ஏரியின் மறுகரையில், பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் கலங்கரை விளக்கத்தை அமைத்தனர். இன்றும், அந்த கலங்கரை விளக்கத்தை பார்க்க, பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும்,1622ம் ஆண்டு அமைக்கப்பட்ட கல்லறையும், சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக, தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், தற்போது பழவேற்காடு பகுதியை சுற்றி பழவேற்காடு, கோட்டக்குப்பம், தங்கல் பெரும்பலம், லைட் ஹவுஸ் ஆகிய ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள சுமார் 40 மீனவ கிராமங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.பழமை வாய்ந்த பழவேற்காட்டை சுற்றி அமைந்துள்ள மகிமை மாதா ஆலயம், டச்சு கல்லறை, நிழல்கடிகாரம், பிரசித்தி பெற்ற வெங்கடேச பெருமாள் கோயில், கப்பல்கட்டும் தளம், பறவைகள் சரணாலயம், இயற்கை எழில் கொண்ட பகுதியை பார்வையிட தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள நீண்ட கடற்கரை மற்றும் பழவேற்காடு ஏரியின் தோற்றத்தை மேம்பாலத்தில் இருந்து காண்பது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. மேலும், இப்பகுதியின் மொத்த அழகை ரசிக்க இங்குள்ள மிகப்பெரிய கலங்கரை விளக்கத்தின் மேல் ஏறி நின்று கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.இதையொட்டி, சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று, மாலை 3 முதல் 5 மணி வரை கலங்கரை விளக்கத்தில் இருந்து பழவேற்காடு பகுதியின் ரம்மியத்தை பார்க்க, சுற்றுலா துறை அனுமதி அளித்துள்ளது.ஆனால், கலங்கரை விளக்கத்தின் மேலே குறிப்பிட்ட நேரத்தில் கண்டுகளிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.நீண்ட தூரம் பயணம் செய்து பழவேற்காடு வரும் சுற்றுலா பயணிகள், கலங்கரை விளக்கத்தில் இருந்து கடல் மற்றும் ஏரியின் அழகிய காட்சிகளை கண்டு ரசிக்க முடியாமல் திரும்பி செல்வதால் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பய ணிகள், பழவேற்காடு பகுதிக்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள கலங்கரை விளக்கத்தில், டிக்கெட் பெற்று அதன் மீது ஏறி சென்று, அப்பகுதி அழகை ரசிக்கலாம்.இதற்காக மாலை 3 மணி முதல் 5 மணி வரை, சுற்றுலா துறை, பார்வையாளர்கள் கண்டுகளிக்க அனுமதியளித்துள்ளது. ஆனால், இங்குள்ள ஊழியர்கள், சுற்றுலா பயணிகளை, கலங்கரை விளக்கத்தில் செல்ல அனுமதிப்பதில்லை. இதனால், பணத்தை செலவு செய்து, பல கிலோ மீட்டர் பயணம் செய்து இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன், கடும் அதிருப்தியடைந்து செல்கின்றனர்.எனவே, பழவேற்காடு பகுதியில் உள்ள பழமைவாய்ந்த தேவாலயம், கோட்டை, கல்லறை, கலங்கரை விளக்கம் ஆகியவற்றை முறையாக பராமரித்து, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்தால், அரசுக்கும் வருமானம் கிடைக்கும். அதே நேரத்தில், தமிழகத்தில் எல்லையில், தீவு அருகே இதுபோன்ற பழங்கால பொக்கிஷம் இருப்பது உலகுக்கு தெரியவரும் என்றனர்.

Tags : lake View ,Pulicat ,
× RELATED சென்னை அருகே அதானி துறைமுக...