×

மணிலா மூட்டை எடை போட்டதில் தில்லுமுல்லு தனியார் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகை ஆரணியில் பரபரப்பு

ஆரணி, டிச.20: ஆரணியில் மணிலா மூட்டைகளை எடை போட்டதில் தில்லுமுல்லு நடந்ததாக, தனியார் கொள்முதல் நிலைத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரணி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தங்களது நிலங்களில் விளைந்த நெல், வேர்கடலை, எள், உளுந்து ஆகியவற்றை ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்து வருகின்றனர். கூடுதலாக விலை கிடைப்பதால் சில விவசாயிகள், ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் உள்ள தனியார் கொள்முதல் நிலையத்தில் விளைபொருட்களை விற்பனை செய்கின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் செய்யாறு தாலுகா வெளுமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, முரளி, நேதாஜி, பெருமாள் உட்பட ஏராளமான விவசாயிகள், தங்களது நெல் மற்றும் மணிலா மூட்டைகளை தனியார் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

அதில் முரளி என்பவர் தான் கொண்டு வந்த 13 மணிலா மூட்டைகளில், 10 மூட்டைகளை அங்கு விற்றுவிட்டார். மீதமுள்ள 3 மணிலா மூட்டைகளை செக்கு கடைக்கு கொண்டு சென்றார். அங்கு மூட்டையை எடைபோட்டபோது, கொள்முதல் நிலையத்தில் போட்ட எடையை விட, அங்கு 7 கிலோ கூடுதலாக இருந்தது. தனியார் கொள்முதல் நிலையத்தில் ஒரு மூட்டைக்கு 7 கிலோ தில்லுமுல்லு செய்தது தெரியவந்தது. இதையடுத்து, முரளி மற்றும் விவசாயிகள், தனியார் கொள்முதல் நிலையத்திற்கு சென்று முற்றுகையிட்டு, எடையில் இருந்த முரண்பாடு குறித்து கேட்டனர். அதற்கு உரிமையாளர், ‘மற்ற இடங்களை விட ஒரு மூட்டைக்கு 100 கூடுதலாக வழங்குகிறேன். விருப்பம் இருந்தால் இங்கு விற்பனை செய்யுங்கள்' என கூறியதுடன் மிரட்டியதாக கூறப்படுகிறது. அதற்கு விவசாயிகள், ‘நாங்கள் விற்பனை செய்த மணிலா, நெல் மூட்டைகளை திருப்பி கொடுங்கள்' என கேட்டனர்.

ஆனால் உரிமையாளர், கொள்முதல் செய்த பொருட்களை தர மறுத்துவிட்டாராம். இதனால் இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல், மணிலா மூட்டைகளை உரிமையாளர் திரும்ப கொடுத்துவிட்டார். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், `ஆரணி ஒழுங்கு முறை விற்பனை நிலையத்திற்கு விளைபொருட்களை எடுத்தும் செல்லும் விவசாயிகளிடம், இடைத்தரகர்கள் சிலர் அதிக விலை தருவதாக கூறி தனியார் கொள்முதல் நிலையத்திற்கு அழைத்து செல்கின்றனர். ஆனால், அங்கு எடையில் முறைகேடு செய்து ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Tags : Farmers siege ,Aranmula Private Trades Center ,
× RELATED லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை...