×

கோமாரி நோய் தாக்குதல் எதிரொலி வியாபாரிகள் வராததால் வெறிச்சோடிய புதன்சந்தை

சேந்தமங்கலம், டிச.19:  கோமாரி நோய் தாக்குதல் எதிரொலியாக, மேலும் 2 வாரங்களுக்கு கால்நடை சந்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வியாபாரிகள் யாரும் வராமல் புதன்சந்தை வெறிச்சோடியது.  நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். மாடுகளை வாங்க, விற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம். இந்நிலையில், கோமாரி நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால், மாட்டுச்சந்தை கூடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் 2 வார தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம், திருச்செங்கோடு மோர்பாளையம், புதன்சந்தை மாட்டுச்சந்தைகளுக்கு மேலும் 2 வாரம் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று புதன்சந்தைக்கு மாடுகளை விற்கவோ, வாங்கவோ வியாபாரிகள் வராமல் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘மாட்டுச்சந்தைக்கு தடை விதித்தால் மட்டும் கோமாரி நோயை தடுக்க முடியுமா?. நாமக்கல் மாவட்டத்தில் தற்போது கோமாரி நோய் தாக்கம் இல்லை. கொங்கு மண்டலத்தில் மட்டும் தான் மாட்டுச்சந்தைகள் கூடவில்லை. தமிழகத்தின் மீதமுள்ள 70 சந்தைகளும் நடந்து கொண்டு தான் உள்ளது. கடந்த ஒரு மாதமாக மாட்டு சந்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது,’ என்றனர்.

Tags :
× RELATED கோடை கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும்