×

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம்

கிருஷ்ணகிரி, டிச.19:  மாவட்டம் முழுவதும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் நேற்று அதிகாலை திறக்கப்பட்டது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம், வைணவ ஆலயங்களில் வைகுண்ட ஏதாதசி நாளன்று பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 4 மணிக்கு கோலாகலமாக நடக்கும். நேற்று ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி அனைத்து பெருமாள் கோயில்களிலும் நடந்தது. பெருமாள், தேவி, பூதேவி சமேதராய் பரமபதவாசல் வழியாக எழுந்தருளினர். குளிரையும் பொருட்படுத்தாமல் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் கோயில் முன்பாக காத்திருந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

  கிருஷ்ணகிரி புதுப்பேட்டை வடக்கு மாட வீதியில் உள்ள நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு அதிகாலையிலேயே சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. காலை 4.30 மணிக்கு பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வந்தார். இதைத் தொடர்ந்து சீதேவி, பூதேவி சமேதராய் நவநீத வேணுகோபால சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி வேணுகோபால சுவாமி கோயில், பழையபேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோயில், காட்டு வீர ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள வெங்கட்ரமண சுவாமி கோயில், போச்சம்பள்ளி அடுத்த சென்றாமலை சென்றாய பெருமாள் கோயில், ஓசூர் பெருமாள் கோயில், சூளகிரி வரதராஜ பெருமாள் கோயில், கோபசந்திரம் தட்சிண திருப்பதி கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.

தேன்கனிக்கோட்டை பேட்டராயசுவாமி கோயிலில் கடந்த 7ம்தேதி முதல் பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது. இதில் தினசரி காலை 5 மணிக்கு பெருமாள் தாயாருக்கு சிறப்பு அலங்காரம், திருவீதி உலா நடந்து வருகிறது. 18ம் தேதி முதல் 29ம் தேதி வரை ராப்பத்து உற்சவம் நடைபெறுகிறது. நேற்று 18ம்தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. தேவி, பூதேவி சமேத பேட்டராயசுவாமி உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கோயிலை சுற்றி வந்து அருள்பாலித்தார். விழாவில் பெங்களூரு, ஓசூர், தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதி ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி சங்கர் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

ஓசூர்:  காமன்தொட்டி தட்சணதிருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில், நேற்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டியும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும், வெங்கடேஸ்வரசுவாமி சேவ டிரஸ்ட் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  அதேபோல் கோதண்டராமசுவாமி, வெங்கடேஷ் நகரில் உள்ள வெங்கடாசலபதி மலைக்கோயில், பண்டாஞ்சநேயர்கோயில், சீதாராமர் கோயில், பேட்ராயசுவாமி கோயில், ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலிலும் சொர்க்க வாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது.  

Tags : Devotees ,opening ,paradise ,temples ,Vaigunda Ekadasi ,Perumal ,
× RELATED திருப்பதி கோயிலில் ரூ.4.23 கோடி உண்டியல் காணிக்கை