×

அஞ்செட்டி தாலுகா அலுவலகத்தில் ₹1.90 கோடியில் நலத்திட்ட உதவி அமைச்சர் வழங்கினார்

தேன்கனிக்கோட்டை, டிச.19:      கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி புதிய தாலுகாவாக உருவாகியுள்ளது. இங்குள்ள தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, ₹1 கோடியே 90 லட்சத்து 776 மதிப்பில் 639 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது; அஞ்செட்டி பகுதியானது மலைவாழ் மக்கள் வசிக்கும் கடைக்கோடி பகுதி.  இப்பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக அஞ்செட்டி பகுதியை தாலுகாவாக அறிவிக்க வலியுறுத்தி வந்தனர்.

இக்கோரிக்கை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது புதிய தாலுகா உதயமாகி தாசில்தார் அலுவலகம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, என்றார்.  தொடர்ந்து, அஞ்செட்டியில் புதிய பயணிகள் நிழற்கூடம் ₹6.9 லட்சம் மதிப்பில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை பொது நிதியிலிருந்து பணிகள் மேற்கொள்வதையும், தளி ஒன்றியத்திற்குட்பட்ட அஞ்செட்டியில் ஒன்றிய பொதுநிதியிலிருந்து ₹5 லட்சம் மதிப்பில் சுத்தகரிப்பட்ட குடிநீர் மையமும் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் 2017-18ம் ஆண்டிற்கான ஆண், பெண் இருபாலரும் பயன்படுத்தும் பொது கழிப்பறை புதிய கட்டிடம் ₹13 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதை அமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாச்சியர் விமல்ராஜ், தாசில்தார்கள் பாலசுந்தரம், வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர்கள் ஜாகீர்உசேன், கணேசன், பேரூர் செயலாளர் நாகேஷ் மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Anilty Thalukha ,
× RELATED முட்டை விற்பனை ஜோர்