×

திருச்சுழி பகுதியில் அதிவேக லாரிகளால் விபத்து அபாயம் பொதுமக்கள் அச்சம்

திருச்சுழி, டிச. 19: திருச்சுழி பகுதியில் மணல் மற்றும் கல்குவாரிகள் அதிகளவில் உள்ளன. இந்த குவாரிகளிலிருந்து மணல், கற்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் முத்துராமலிங்கபுரம் புதூர், திருச்சுழி, தமிழ்பாடி வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில், கிராமங்களில் உள்ள குறுகிய சாலைகள் வழியாக இந்த லாரிகள் அதிகவேகமாக செல்வதால், பொதுமக்களும், மாணவ, மாணவியருக்கும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், லாரிகளில் மணல் அள்ளிச் செல்லும்போது, தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்வதால், மணல் தூசுகள் பறந்து, இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து, விபத்தில் சிக்குகின்றனர். கிராமப்புறங்களில் வேகமாகச் செல்லும் லாரிகளின் வேகத்தை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
திருச்சுழி, தமிழ்பாடி கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து திருச்சுழியை சேர்ந்த ராமசுப்பு கூறுகையில்: எங்கள் கிராம பகுதியில் மணல் மற்றும் கல்குவாரிகளும் அதிகளவில் உள்ளன. தென் மாவட்டங்களில் இருந்து அருப்புக்கோட்டை, விருதுநகர், ராஜபாளையம் உள்பட பல ஊர்களிலிருந்து திருச்சுழி பகுதியில் அமைந்திருக்கும் குவாரிகளுக்கு மணல், ஜல்லி போன்ற கட்டுமான பொருட்கள் ஏற்றுவதற்காக கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த லாரிகள் அதிக வேகமாக செல்வதால், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும், இருசக்கர வாகனத்தில் செல்லும் மாணவ, மாணவியருக்கும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள், மாணவ, மாணவியரின் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : area ,Tiruchuri ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...