×

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் பங்கேற்பு

சாயல்குடி, டிச. 19: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ராமநாதபுரம், முதுகுளத்தூர், கடலாடி, தொண்டி பகுதி பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடந்தது. மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு முதுகுளத்தூர் அருகே உள்ள ஆதங்கொத்தங்குடி சீனிவாச பெருமாள் கோயிலில் அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

விரதமிருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பெருமாளுக்கு மஞ்சள், விபூதி, சந்தனம், தேன் உள்ளிட்ட 11 வகை அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் உற்சவ மூர்த்தி வீதி உலா நடந்தது. இதனை போன்று கடலாடி அருகே உள்ள கொத்தங்குளம் வரதராஜபெருமாள், மீனங்குடி கல்லடி பெருமாள், மாரந்தை வரஹாபெருமாள், கடலாடி ருக்குமணிகண்ணன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் தீபாரதணை நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் கோதண்டராமர் கோயிலில் பெருமாள் சயன கோலத்தில் காட்சி அளித்தார். தொண்டியில் உள்ள உந்திபூத்த பெருமாள் கோயில் சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்குள்ள பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் சுமார் 6 அடி உயரம் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் இங்கு மட்டுமே பெரிய சிலைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் மற்றும் அப்பாளுக்கு அதிகாலை 4 மணிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து பகத்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

Tags : Devotees ,Perumal Temple ,Vaigunda Ekadasi ,
× RELATED தென் திருப்பதி- திருமலை வையாவூர்...