×

கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரையை அமலாக்க கோரி கிராமப்புற அஞ்சலர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, டிச.19: கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி கிராமப் புற அஞ்சலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவங்கி அதனையொட்டி மன்னார்குடி தலைமை அஞ்சலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கான கமலேஷ் சந்திரா கமிட்டியின் அனைத்து பரிந்துரைகளையும் ஜனவரி 2016 முதல் அமல்படுத்திட வேண்டும், அஞ்சல் துறையை தனியார் மயமாக முயற்சிப்பதை கைவிட வேண்டும், கிராமப்புற அஞ்சலங்களை மூடும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும், தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும், கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் நேற்று முதல் தொடர் வேலை நிறுத்தத்தை துவங்கினர்.

போராட்டத்தின் முதல் நாளையொட்டி அகில இந்திய கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் மன்னார்குடி தலைமை தபால் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க கிளையின் தலைவர் தமிழ்ச்செல்வன், செயலாளர் உதயகுமார், பொருளாளர் பண்டரிநாதன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு மே 28ம் தேதி முதல் ஜூன் 16ம் தேதி வரை தொடர்ச்சியாக 19 நாட்கள் கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட மத்திய அரசு தங்களின் முக்கிய  கோரிக்கைகளை திட்டமிட்டு புறம் தள்ளி தங்களை வஞ்சித்து விட்டதால் இந்த ஆண்டும் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் போராட்டத்தை துவங்கி உள்ளதாக சங்க நிர்வாகிகள் கூறினர். கிராமப்புற அஞ்சலர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் மன் னார்குடி, கோட்டூர் வட்டாரங்களில் உள்ள சுமார் 220 கிராமப்புற அஞ்சல கங்கள் வெறிசோடி கிடக்கின்றன.

Tags :
× RELATED முத்துப்பேட்டை அருகே ஊராட்சி மன்ற செயலர் ஆதரவாளர்களுடன் மறியல்