×

‘சம்திங்’ தருவதற்கு முற்றுப்புள்ளி உட்கார்ந்த இடத்திலேயே பலன் பெற சிறப்பு முகாம்

மதுரை, டிச. 19: ரூ.பல ஆயிரம் ‘சம்திங்’ தந்து பெற வேண்டிய ஆவணங்களை ஒரு பைசா செலவில்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே மக்கள் பலன்களை பெற சிறப்பு முகாமிற்கு மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, புதிய வரிவிதிப்பு, பெயர் மாற்றம், காலிமனை வரி விதிப்பு, தொழில் உரிமம் வழங்குதல், புதுப்பித்தல், தொழில் வரி ஆகியவற்றை பெற மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டணங்களை செலுத்தினால் உடனே ஆவணங்கள் கிடைத்து விடுமா... என்றால் இல்லை, இதற்காக ரூ.10 ஆயிரம் வரை ‘சம்திங்’ தர வேண்டிய கட்டாய நிலை உள்ளது. ‘சம்திங்’ தராததால் பெரும்பாலான மக்களுக்கு இதுவரை பலன் கிடைக்காமல் இருந்து வருகிறது. இதனால் பணம் தந்தால் தான் பலன் கிடைக்கும் என்ற நிலை இருந்து வருவதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.

இந்நிலையில் அவனியாபுரம் வார்டு அலுவலகத்தில் வரும் வியாழன் அன்று (டிச.20) மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி கமிஷனரே பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பெறுகிறார். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சியின் அனைத்து பிரிவுகளை ேசர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் அங்கு அமர்ந்திருப்பார்கள். பொதுமக்கள் கண் முன்பே அலுவலர் முதல் அதிகாரி வரையில் கையொப்பம் பெற்று மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கமிஷனர் அனீஷ்சேகர் கூறுகையில், ‘உதாரணமாக சொத்துவரி பெயர் மாற்றம் செய்ய அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். மக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். உட்கார்ந்த இடத்திலேயே பொதுமக்கள் பலன் அடையலாம்’ என்றார்.

Tags : camp ,
× RELATED திருவாரூர் முத்துப்பேட்டை இலவச...