×

மதன கோபாலசுவாமி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

பெரம்பலூர்,டிச.19:   பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் சொர்க்கவாசல்  திறப்பு. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்திப்பரவசத்தில் கோஷமிட்டு  வழிபட்டனர்.
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, பெரம்பலூரில் இந்துசமய  அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மரகதவல்லித்தாயார் சமேத  மதன கோபால சுவாமி கோயிலில் நேற்று காலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. காலை 6மணிக்கு பரமபதவாசல் எனப்படும்  கோயிலின் பிரமாண்ட கதவுகள் திறக்கப்பட்டு மதனகோபால சுவாமி  சிறப்பு தரிசனம் கொடுத்தார். இதற்காக அதிகாலை 4மணிமுதல் வாசலின் முன்பு  திரண்டு காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா, ரெங்கா,  ரெங்கா என பக்திப்பரவசத்தில் கோஷமிட்டு வழிபட்டனர். பெரம்பலூர்,  துறைமங்கலம், அரணாரை, எளம்பலூர் என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த  ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதனகோபால சுவாமியை தரிசித்து அருள்பெற்று  சென்றனர்.    
 
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை இந்துசமய  அறநிலையத்துறையின் இணை ஆணையர் கல்யாணி, துணைஆணையர் (தக்கார்) முருகையா,  கோயில்நிர்வாக அலுவலர் மணி ஆகியோர் செய்திருந்தனர். பூஜைகளை பட்டாபி  பட்டாச்சாரியார் தலை மையில் பல்வேறு குருக்கள் இணைந்து செய்திருந்தனர்.  இரவு 7.30மணியளவில் வெள்ளி கருடசேவை திருவீதியுலா நடைபெற்றது. இதேபோல்  பெரம்பலூர் மாவட்டத் தில் பாளையம், குரும்பலூர், எசனை, அரும்பா வூர்,  மேட்டூர், பூலாம்பாடி உள்ளிட்டப் பல்வேறு கிராமங்களில்அமைந்துள்ள பெருமாள்  கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா கொண்டாடப் பட்டது.

Tags : Paradise opening ,Madana Gopalaswamy ,
× RELATED வைகுண்ட ஏகாதசியையொட்டி வைணவ...