×

கொடைக்கானலில் ஒரே வாரத்தில் 2 காட்டெருமைகள் பலி: வனத்துறை தீவிர விசாரணை

கொடைக்கானல், டிச. 19: கொடைக்கானலில் ஒரே வாரத்தில் 2 காட்டெருமைகள் உயிரிழந்ததால், வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொடைக்கானல் நகர் மற்றும் முக்கிய சுற்றுலா இடங்களில் காட்டெருமைகள் அதிக அளவு உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் அச்சத்துடனே நடமாடி வருகின்றனர். இவற்ைற வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், வனத்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே தனியார் தோட்டத்தில் ஒரு காட்டெருமை பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தது.

நேற்று முன்தினம் கொடைக்கானல் சிவனடி சாலையில் உள்ள ஒரு இடத்தில் மற்றொரு காட்டெருமை தடுமாறி விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்து நடமாட முடியாமல் தவித்தது. தீவிர சிகிச்சை அளித்தும்  பலனின்றி நேற்று உயிரிழந்தது. பிரேத பரிசோதனை முடிந்து, தோட்டத்தில் புதைக்கப்பட்டது. கொடைக்கானல் ரேஞ்சர் ஆனந்தகுமார் கூறியதாவது, ‘‘வயது மூப்பு காரணமாக இரண்டு காட்டெருமைகளும் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்ததில் பலியாகியுள்ளது’’ என்றார். ஒரே வாரத்தில் 2 காட்டெருமைகள் பலியானதால் வனத்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : gaurs ,investigation ,Forest Department ,
× RELATED கோவை அருகே வனப்பகுதியில் ஓடையில்...