×

மேகதாது அணை விவகாரம் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி

நாகர்கோவில், டிச. 19: மத்திய அரசு ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் நாகர்கோவிலில் தெரிவித்தார். பொதுகணக்கு குழு ஆய்வுக்கு வருகை தந்த திமுக பொருளாளர் துரைமுருகன் பின்னர் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அரசாங்கம் ஆளும் கட்சி சார்ந்தது, எல்லா குழுக்களுக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் தலைவராக இருப்பர். ஆனால் பொதுகணக்கு குழுவுக்கு மட்டும்தான் எதிர்கட்சியினர் தலைவராக இருப்பர். ஜனநாயக முறைப்படி அமைக்கப்பட்ட அரசியல் அங்கீகாரம் பெற்ற குழு, அதிகாரிகளை யாரை வேண்டுமானாலும் அழைத்து கேள்வி கேட்கலாம்..

இன்று நடந்த ஆய்வில் பெரிய அளவில் குற்றங்கள் இல்லை, அறிவுரை கூறி எச்சரிக்கை செய்யும் அளவில்தான் இருந்தது. திமுக, காங்கிரஸ் கூட்டணியை எதிர்கட்சிகள் வாழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆளும் கட்சியினர் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுகளை சிபிஐ உண்மை என்று எடுத்துக்கொண்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீது டென்டர் போட்டது தப்பு என்று கூறியதை நீதிமன்றம் இன்று எடுத்துக்கொண்டுள்ளது. எதிர்கட்சி என்பதற்காக சேற்றை வாரி இறைக்க மாட்டோம். ஆதாரங்களோடுதான் பேசுவோம்.  எய்ம்ஸ் மருத்துவமனை இப்போதாவது கொடுத்தார்களே என்று மகிழ்ச்சியடைய வேண்டும். ஏழாயிரம் கோடியில் மேகதாதுவில் அணை கட்டுகின்றனர். மேகதாது என்பது 10, 15 மீட்டர் தூரம்தான். இதில் எப்படி அணை கட்ட முடியும்.

இதனை சட்டமன்றத்தில் நான் தெரிவித்தேன். மேகதாது ஒரு மலை, அங்கு முத்தாட்டி என்ற ஒரு இடம் உள்ளது, அங்குதான் அணை கட்டுவர். நமது மந்திரிகளுக்கு இதெல்லாம் தெரியாது. மேகதாது அணை விவகாரத்தில் மத்திய  அரசு கர்நாடகாவுக்கு ஆதரவாக உள்ளது.  இது பற்றி தமிழகத்திடம் கேட்கவில்லை.  ஜட்ஜ்மென்டில் கூறியுள்ளார்கள், தமிழகம், பக்கத்து மாநிலம் அதனை கேட்டு  சொல்கிறேன் என்றாவது கூறியிருக்க வேண்டும், எடுத்த உடனே கூறிவிட்டு இப்போது  விரிவான விளக்க அறிக்கை கேட்ட பின்னர் தமிழகத்திற்கு பாதகம் வராது என்று  குமாரசாமி கூறினால் மட்டும் பாதகம் வராதா?

 மத்திய அரசு ஒட்டு மொத்தமாக தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளது.  ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசாணை பற்றி ஆரம்பத்தில் மு.க.ஸ்டாலின் சொன்னார். கேபினட் கூடி முடிவு எடுத்தால்தான் அரசின் முடிவு, அதற்கு வலிமை அதிகம் என்றார். அவர்கள் அதிமேதாவிகள், அதெல்லாம் தேவையில்லை என்றார்கள். இன்று அரசாணையை அடித்துவிட்டனர்.   பா.ஜ.வினர் எங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்க முடியுமா? திருமாவளவன், ஸ்டாலின் கருத்தை ஆதரித்துள்ளார்.   ஜெயலலிதாவுக்கு சாப்பாடு செலவு ₹5 கோடி கூட ஆகட்டும், காப்பாற்றியிருந்தால் பரவாயில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ் உடனிருந்தனர்.

சகாராவாக மாறிய நெல் களஞ்சியம்
துரைமுருகன் மேலும் கூறுகையில், தமிழகத்தில் புயல் சேதத்திற்கு பணம் கொடுப்பது அப்புறம், இதுபோன்று வெள்ள சேதம் கேரளாவில் ஏற்பட்ட போது பிரதமர் அங்கு ஹெலிகாப்டரில் சென்று சுற்றி பார்த்தார். அவருக்கு இருக்கும் வேலையில் நேரில் வரக்கூட வேண்டாம். இப்போது 90 நாடுகளுக்கு அவர் சென்று விட்டார், 10 நாடு சென்றால் 100 நாடு கண்ட பிரதமர் என்று  அவருக்கு பாராட்டு கூட்டம் நடத்தலாம். அவர் ஒரு அனுதாப செய்தியாவது அனுப்ப வேண்டாமா? பீகாரில் வெள்ளம் வந்தால் அனுதாப செய்தி அனுப்புகிறார், ஜப்பான், இந்தோனேஷியா எல்லா நாடுகளுக்கும் அனுதாப செய்தி அனுப்பினார். தமிழகத்தின் நெல் களஞ்சியம் சகாராவாக மாறிவிட்டது.

Tags : Thuramurugan ,DMK ,
× RELATED விழுப்புரம் மாவட்ட திமுக நிர்வாகிகள்...