(தி.மலை) பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு: அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் திரண்டனர் திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, டிச.19: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி அண்ணாமலையார் கோயிலில், ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வைணவ கோயில்களில் நேற்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு விமரிசையாக நடந்தது. வழக்கமாக, வைணவ கோயில்களில் மட்டுமே நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு, சைவ திருக்கோயிலான அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறுவது தனிச்சிறப்பாகும்.  அரியும், சிவனும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் நடைபெறும் இவ்விழா, நேற்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் விமரிசையாக நடந்தது. அதன்படி, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

பின்னர், அதிகாலை 5 மணியளவில், அண்ணாமலையார் கோயில் 2ம் பிரகாரத்தில் உள்ள வேணுகோபால சுவாமி சன்னதியில், சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, வைகுந்த வாயில் (சொர்க்க வாசல்) திறப்பு பெற்றது. அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டபடி, சொர்க்கவாசலை கடந்து 3ம் பிரகாரத்துக்கு சென்றனர். அதேபோல், மாட வீதியில் உள்ள பூத நாராயணன் கோயில், கிரிவலப்பாதையில் உள்ள குபேர பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. போளூர்: போளூர் பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது தேவி, பூதேவி சமேத வேணுகோபால சுவாமி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர் கோயில் வளாகத்தில் 3 முறை வேணுகோபால சுவாமி வலம் வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தனர்.

இதேபோல், குண்ணத்தூரில் உள்ள தேவி, பூதேவி சமேத வைகுந்த பெருமாள் கோயிலில் பரமபத வாசல் (சொர்க்கவாசல்) அதிகாலை 6.00 மணிக்கு திறக்கப்பட்டது. சுமார் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட புராதன வைணவ ஸ்தலமான வைகுந்த பெருமாள் திருக்கோயிலில் பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.பெரணமல்லூர்: பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோயில் சொர்க்கவாசல் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. பின்னர், மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பட்டாச்சாரியார் முகுந்தன் தலைமையில் உற்சவ மூர்த்திகளான தேவி, பூதேவி சமேத சீனுவாச பெருமாளுக்கு தேன், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம் கொண்டு திருமஞ்சனம் நடந்தது.

முத்தங்கி அலங்காரத்தில் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத்ெதாடர்ந்து மலைமீதுள்ள உற்சவ மூர்த்திகள் மாடவீதி உலா வந்தார். சிம்ம மலையில் உள்ள சீனுவாச பெருமாளை பக்தர்கள் வழிபட்டனர்.

சேத்துப்பட்டு: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சேத்துப்பட்டில் உள்ள  வரத சஞ்சீவிராய பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள தேவி, பூதேவி பக்தர்களுக்கு கோபுர தரிசனம் வழங்கினார். இதேபோல், பழம்பட்டை வெங்கடேச பெருமாள் கோயில், அவ்வையார் தெருவில் உள்ள  பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நெடுங்குணம் ராமச்சந்திர பெருமாள் கோயிலில் தேவி, பூதேவி சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத்தொடர்ந்து மாடவீதி உலா வந்தனர். அப்போது பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை பிளந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

செங்கம்: செங்கம் வேணுகோபால பார்த்த சாரதி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று இரவு ஆன்மிக சொற்பொழிவு, நடன நிகழ்ச்சிகள் நடந்தது. வேட்டவலம்: வேட்டவலம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து தேவி பூதேவி உடனுறை வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories:

>