×

பெரணமல்லூர் அருகே நூறு நாள் திட்ட பணியாளர்களை புறக்கணித்து சாலை பணி பொதுமக்கள் அதிர்ச்சி

பெரணமல்லூர், டிச.19: பெரணமல்லூர் அருகே நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களை புறக்கணித்து அதிகாரிகள் ஜேசிபி உதவியுடன் தரமற்ற சாலையை அமைத்து வருவதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் 57 கிமீ சாலை பணி மற்றும் இதர பணிகள் அமைக்க சுமார் ₹10.87 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டது. இந்த சாலைப் பணிகளில் நூறு நாள் திட்ட பணியாட்களை ஈடுபடுத்த வேண்டும் என்பதே விதிமுறையாகும்.இந்நிலையில் பெரணமல்லூர் ஒன்றிய அளவில் சாலை மற்றும் இதர பணிகள் சுமார் ₹3 கோடி அளவில் நடைபெற்று வருகிறது. இதில் பெரணமல்லூர் அடுத்த மகாதேவிமங்கலம், மதுரா, சென்னந்தல் பகுதியில் வயல் ஏரி பகுதிக்கு ஒரு கிமீ தொலைவு சாலை அமைக்க ₹19 லட்சம் ஒதுக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் நூறுநாள் திட்ட பணியாளர்களை கொண்டு இந்த சாலையை அமைக்காமல் அதிகாரிகள் இதற்கு மாறாக ஜேசிபி கொண்டு மும்மரமாக தரமற்ற நிலையில் சாலை பணி நடத்தி வருவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறியதாவது: நூறு நாள் வேலை திட்டம் என்பது மனித சக்தியை கொண்டு செய்ய வேண்டும். ஆனால் பாஜ அரசு பொறுப்பேற்றதில் இருந்து நூறு நாள் திட்ட பணியாளர்களின் வேலை குறைக்கப்பட்டுவிட்டது. அவ்வப்போது சில வேலைகள் வரும். அதுபோல் கடந்த வாரம் எங்கள் பகுதிக்கு ₹19 லட்சத்தில் சாலை பணிக்கு வேலை வந்தது. இதனால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.
புதிய சாலை அமைக்க முதலில் பணியில் கூறியபடி குறிப்பிட்ட அளவு மார்க் செய்ய வேண்டும். பின்பு இரண்டு பகுதிகளிலும் மண் எடுத்து சாலையில் வைக்க வேண்டும். தொடர்ந்து சாலைக்கு தேவையான புறம்பு, ஜல்லி கலவை வைத்து சாலையில் பரப்ப வேண்டும். பின் சாலையில் பரப்பிய ஜல்லி கற்களை ரோலர் மற்றும் ஜேசிபி உதவியுடன் மிதிக்க வேண்டும். ஆனால் இங்கு பணியாளர்களை எங்கும் பயன்படுத்தாமல் முற்றிலும் ஜேசிபி கொண்டே பணி நடைபெற்று வருகிறது. எங்களுக்கு உண்டான வேலையை அதிகாரிகள் வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டு ஒப்பந்ததாரர் உடன் கூட்டுசேர்ந்து அவர்களிடம் மாமுல் வாங்கிக்கொண்டு எங்களை புறக்கணித்துவிட்டனர்.

வருடத்திற்கு வரும் ஒரு சில வேலைகளை அதிகாரிகள் ஒப்பந்ததாரரிடம் மாமுல் பெற்றுக்கொண்டு இதுபோன்று செயல்படுத்துவதால் நாங்கள் வேலை ஏதும் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட ஒன்றிய பொறியாளர் ரமேஷ்யிடம் கேட்டபோது, இச்சாலையை நூறுநாள் பணியாளர்கள் கொண்டு தான் செய்ய வேண்டும். ஆனால் மாவட்டம் முழுவதும் இதுபோல் தான் பணிகள் நடைபெற்று வருகிறது. எங்கள் அதிகாரிகளே இதுபற்றி கண்டு கொள்வதில்லை. அவர்கள் தான் ஜேசிபி கொண்டு வேலையை முடிக்க வேண்டும் என கூறுகின்றனர் என்று தெரிவித்தார். ஏற்கனவே நூறுநாள் திட்ட பணியாளர்கள் வேலை ஏதும் இல்லாமல் கஷ்டத்தில் வாடி வருகின்றனர். அவர்களின் குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறையினர் அவர்களுக்கு ஒதுக்கப்படும் வேலையினை இயந்திரம் கொண்டு செய்யாமல் பணியாளர்களை கொண்டு செய்ய வேண்டும். இதுவே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Tags : programmers ,Peranamallur ,
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...