×

உயர்கோபுர மின்விளக்கு அமைக்க 50 ஆண்டு பழமையான மரம் அகற்றம்

பெரும்புதூர், டிச. 19: குன்றத்தூர் ஒன்றியம் சோமங்களத்தில் உயர்கோபுரம் மின் விளக்கு அமைக்க 50 ஆண்டு பழமையான மரத்தை உரிய அனுமதியின்றி, மக்கள் எதிர்ப்பை மீறி அதிமுகவினர் வெட்டி அகற்றியுள்ளனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  குன்றத்தூர் ஒன்றியம் சோமங்கலம் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது பெரும்புதூர் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சோமங்கலம் கிராமத்தில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சோமங்கலம்-குன்றத்தூர் சாலை மேட்டூர் சுடுகாடு அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆள் நடமாட்டம் இல்லாத, இந்த பகுதியில் மின் விளக்கு அமைக்க கூடாது என்றும், மாறாக மின்விளக்கு வசதி இல்லாத சோமங்கலம் காவல் நிலையம், சிவன் கோயில் போன்ற இடங்களில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என்று சோமங்கலம் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி சோமங்கலம் பகுதி அதிமுகவினர், பிடிவாதமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு மேட்டூர் சுடுகாட்டில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கும் பணியை துவக்கினர். மேலும் மரம் அமைக்க அந்த பகுதியில் இருந்த சுமார் 50 ஆண்டுகள் பழமையான ‘‘தூங்கு மூஞ்சி’’ மரத்தை அனுமதியின்றி வெட்டி அகற்றி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘தற்போது மின்விளக்கு அமைக்க தடையாக உள்ள சுமார் 50 ஆண்டுகள் பழமையான மரத்தினை அதே பகுதியை சேர்ந்த அதிமுகவினர் எவ்வித அனுமதியும் பெறாமல் தன்னிசையாக வெட்டி விற்பனை செய்துள்ளனர்.

 இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டால். ‘‘நாங்கள் எம்எல்ஏ விடம் மரத்தை வெட்டி எடுக்க போகிறோம் என்று அனுமதி பெற்ற பிறகே மரத்தை வெட்டி எடுத்தோம்’’ என்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர்.
இதனால் எங்கள் கிராம மக்கள் சார்பில் அனுமதி இல்லாமல் மரத்தை வெட்டிய அதிமுகவினர் மீது சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளோம். எனவே சோமங்கலம் பகுதி அதிமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : OVC ,
× RELATED மக்களவையில் குடியுரிமை திருத்தச்சட்ட வரைவை கிழித்த ஒவைசி