
ஊத்துக்கோட்டை, டிச.19: பெரியபாளையம் அருகே இட வசதியில்லாத வெங்கல் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால், கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியபாளையம் அருகே வெங்கல் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு பெரியபாளையம் - தாமரைப்பாக்கம் சாலையின் ஓரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு வெங்கல், வெங்கல் குப்பம், செம்பேடு, பாகல்மேடு உள்ளிட்ட 20 கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும்இந்த வெங்கல் மருத்துவமனை ஒரே ஒரு கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
இதனால் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சிகிச்சை பெற வரும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இடநெருக்கடியில் தவிப்பதுடன், சிகிச்சை பெற முடியாமல் பல மணி நேரம் காத்துக்கிடக்கின்றனர். மேலும் கூட்டம் காரணமாக, அவசரகதியில் சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்படுகிறது. சாலையின் ஓரத்திலேயே மருத்துவமனை இயங்குவதால் மருத்துவமனைக்கு வருபவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வெளியே உட்காரும் போது, திடீரென குழந்தைகள் விளையாட்டு போக்கில் சாலைக்கு சென்று விடுகிறார்கள். இதனால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே இந்த மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது; வெங்கல் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான இடவசதி இல்லை. அதிக நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தால் சாலை ஓரத்தில் ஆபத்தான நிலையில் நிற்க வேண்டியுள்ளது. இந்நிலையில், வெங்கலில் உள்ள ஈஸ்வரன் கோயில் தெருவில் 8 வகுப்பறைகளுடன் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வந்தது. இந்த பள்ளி கடந்த 5 வருடத்திற்கு முன்பு அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகில் உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு விட்டது. தற்போது இந்த பழைய பள்ளி கட்டிடம் யாரும் பயன்படுத்துவதில்லை. மேலும், பள்ளி கட்டிடத்தில் சமூக விரோதிகள் சிலர் மது அருந்துவது, சூதாட்டம் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இந்த பள்ளி கட்டிடத்தை சீரமைத்து, அங்கு மருத்துவமனையை இயக்கினால் பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்’ என்றனர். மேலும், முன்னாள் ஊராட்சி தலைவர் சீனிவாசன் கூறும் போது, இடவசதி குறைபாடால் வெங்கல் அரசு மருத்துவமனையை பள்ளி கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். ஆனால் இதுவரை எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றார்.