×

கையில் கருப்புக்கொடி ஏந்தி பிடிடிசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, டிச. 18:  புதுவை தலைமை தபால் நிலையம் எதிரே கையில் கருப்புக்கொடி ஏந்தி பிடிடிசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுவை நோணாங்குப்பம், சுண்ணாம்பாறு படகு குழாமில் தனியார் படகு துறையின்  இடைக்கால அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென ஊழியர்கள் தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை ரத்து செய்யாவிடில் சேர்மன்  பதவியிலிருந்து விலகுவேன் என பாலன் எம்எல்ஏவும் எச்சரிக்கை  விடுத்திருந்தார். இருப்பினும் இவ்விவகாரத்தில் இன்னும் உறுதியான நடவடிக்கை  எடுக்கப்படாமல் உள்ளது.இந்த நிலையில் புதுவை சுற்றுலா வளர்ச்சிக் கழக  அனைத்து ஊழியர் சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு (பிடிடிசி) சார்பில்  நேற்று தலைமை தபால் நிலையம் எதிரே கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. தலைவர் விஜயராகவன், ஒருங்கிணைப்பாளர்கள் கஜபதி,  பாலசுப்பிரமணியன், முகுந்தன், கந்தன், ஆதிகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

அரசு ஊழியர் சம்மேளனம் பாலமோகனன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன்,  மார்க்சிஸ்ட் முருகன், ஏஐடியுசி அபிஷேகம், அண்ணா தொழிற்சங்கம் பாப்புசாமி,  பாட்டாளி தொழிற்சங்கம் கஜபதி, முருகன், மக்கள் வாழ்வுரிமை இயக்கம்  ஜெகன்நாதன், திவிக லோகு.அய்யப்பன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில்  படகு குழாம் ஊழியர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட 200க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டு கருப்பு கொடிகளை கையில் ஏந்தி கோரிக்கைகளை  வலியுறுத்தி
கோஷமிட்டனர். மேலும் வருகிற 20ம்தேதி புதுச்சேரி நகரம் முழுவதும் தெருமுனை பிரசாரம் மேற்கொள்ளவும் போராட்டக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Tags : BDT ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...