×

காரியாபட்டி அருகே அங்கன்வாடியில் கழிவுநீர் ஆக்கிரமிப்பு

காரியாபட்டி, டிச. 18: காரியாபட்டி அருகே, எஸ்.கல்லுப்பட்டி கிராமத்தில், அங்கன்வாடியை சுற்றி கழிவுநீர் ஆக்கிரமித்துள்ளதால், குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, அங்கன்வாடி மையத்தின் பின்புறம் வாறுகால் அமைத்து, கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரியாபட்டி அருகே உள்ள எஸ்.கல்லுப்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அங்கன்வாடி மையத்தில் சுமார் 50 குழந்தைகள் படித்து வருகின்றனர். ஊரின் மையப்பகுதியில் இருக்கும் அங்கன்வாடி மையத்தை சுற்றி, கழிவுநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக வாசல் பகுதியில் வாறுகால் போல கழிவுநீர் ஓடுகிறது. இதில், பிளாஸ்டிக் குப்பைகளும் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. தினமும் சமையல் செய்ய வரும் அங்கன்வாடி சமையலர் கழிவுநீரை அகற்றும் அவலம் உள்ளது. மேலும், சாக்கடை கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது.

அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள் துர்நாற்றத்தால் மையத்தில் உட்கார முடியாமல் அவதிப்படுகின்றனர். சில சமயங்களில் குழந்தைகள் கழிவுநீரில் கால் பதித்து விளையாடுகின்றனர். இதனால், அவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்நிலையில், அங்கன்வாடி மையத்தை சுற்றி தேங்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காவிடில், குழந்தைகளை அனுப்பமாட்டோம் என பொதுமக்கள் கூறி வருகின்றனர். எனவே, குழந்தைகளின் நலன் கருதி அங்கன்வாடி மையத்தின் பின்புறம் வாறுகால் அமைத்து, கழிவுநீர் செல்ல, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Anganwadi ,Kariapatti ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்