×

ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாகனத்திருட்டு சிசிடிவி பழுது நீக்கப்படுமா?

ஆண்டிபட்டி,டிச.18: ஆண்டிபட்டி வாட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்படும் டூவீலர்கள்  தொடர்ந்து திருடப்பட்டு வருவதால் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டிபட்டி தாலுகாவில் 48 கிராம ஊராட்சிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.  இவர்கள் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு தேவையான சிட்டா, பட்டா அடங்கல் உள்ளிட்ட சான்றுகளும், பள்ளி மாணவர்களுக்கு தேவையான கல்விச் சம்பந்தமான சான்றுகளும், குடும்ப அட்டை, வருமான சான்று, ஆதார் அட்டை , அரசு உதவித் தொகைகள் உள்ளிட்ட சான்றுகளை பெறுவதற்காக ஆண்டிபட்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக, பலர் டூவீலர்களில் வரகின்றனர்.

வட்டாட்சியர் அலுவலகத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ஏற்கனவே நவீன சிசிடிவி காமிரா பொருத்தப்பட்டுள்ளது. அதனையும் மீறி அலுவலக பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் திருடப்படுவது தொடர்கதையாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் கூறுகையில், `` வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சான்றுகளை பெறுவதற்காக கடந்த நவ.20ம் தேதி டூவீலரில் வந்தேன். வாகனத்தை அலுவலகத்தின் முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்று திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக வட்டாட்சியரிடம் கேட்டபோது, சிசிடிவி காமிரா பழுதாகி உள்ளது. இனி வரும் காலங்களில் பழுதை சரி செய்வதாக தெரிவித்தார். ஆனால், இன்றுவரை  காமிராவை சரி செய்யவில்லை’’ என்று   கூறினார்.

Tags : Andipati Vattatheeran ,
× RELATED மூணாறில் மழவில் இரும்பு பாலத்தை புனரமைக்க கோரிக்கை