×

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 51 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு கடிதம் டிஆர்ஓ வழங்கினார்

கிருஷ்ணகிரி, டிச.18: கிருஷ்ணகிரியில் நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 51 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு கடிதத்தை டிஆர்ஓ வழங்கினார். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்களிடமிருந்து குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி, பட்டா, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், இலவச தையல் எந்திரம், சலவைப் பெட்டி, மின் இணைப்பு, வீட்டுமனை பட்டா போன்ற கோரிக்கைகள் அடங்கிய 293 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள டிஆர்ஓ அறிவுறுத்தினார்.

 பின்னர், தொழிலாளர் துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்கள் மூலம் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய உதவித்தொகை 1000 வீதம் 51 பயனாளிகளுக்கு 51 ஆயிரம் மதிப்பிலான ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை டிஆர்ஓ வழங்கினார். பட்டு வளர்ச்சித்துறையும், தொழிலாளர் நலத்துறையும் இணைந்து தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியத்திட்டத்தின்கீழ் அரசு வெண்பட்டு வித்தகத்தில் தினக்கூலி பணியாளர்களாக பணிபுரியும்  18 பேருக்கு நல வாரியத்தில் பதிவு செய்து, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சந்தியா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன், உதவி ஆணையர் (ஆயம்) முரளி உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : DRO ,
× RELATED ஊட்டி மகளிர் தின விழாவில் நடனமாடிய கலெக்டர், டிஆர்ஓ