×

துவரை, சூரியகாந்தி விதைகள் மானியத்தில் பெற்று கொள்ளலாம்

பாபநாசம், டிச.18: அம்மாப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் அம்மாப்பேட்டை வட்டாரத்தில் விதை உற்பத்தி குழு, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
புத்தூர் ஏரியை மையமாக கொண்ட அருகில் உள்ள கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விதை உற்பத்தி குழுவில் 20 விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு தரமான விதை உற்பத்தி முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு சுற்றுவட்டார விவசாயிகளுக்கு விதைகள் விநியோகம் செய்யப்பட வேண்டும். இதற்கு சாகுபடி செலவினங்களை மேற்கொள்ள இக்குழுவுக்கு ரூ.50 ஆயிரம் மட்டும் சுழல் நிதியாக வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இறுதியிலும் விதை உற்பத்தி செய்து பயன்படுத்திய சுழல் நிதி அரசு கணக்கில் செலுத்த வேண்டும்.

அடுத்தாண்டுக்கு மீண்டும் இந்த சுழல் நிதியை எடுத்து பயன்படுத்தி விதை உற்பத்தி செய்யப்படும். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புக்குழு மூலம் விளைநிலங்கள் கண்காணிக்கப்பட்டு பூச்சி நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விஷமில்லாத பயிர் பாதுகாப்பு இடுப்பொருட்களான சூடோமோனோஸ், உயிர் உரங்கள் ஆகியவை நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் செயல்விளக்கம் அமைக்க விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இவைதவிர வரப்புகளில் மஞ்சள் பூவகை பயிர்கள் சாகுபடியை ஊக்குவித்து பூச்சி நோய்களை தடுக்கும் விதமாக துவரை, சணப்பு, சூரியகாந்தி, உளுந்து ஆகிய விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. எனவே தேவைப்படும் விவசாயிகள், அம்மாப்பேட்டை வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.

Tags :
× RELATED ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி...