×

கும்பகோணம் சோமேஸ்வரர் கோயில் வாசலை மறித்து வாகனங்கள் நிறுத்துவதால் பக்தர்கள் அவதி

கும்பகோணம், டிச. 18: கும்பகோணம் சோமேஸ்வரர் கோயிலை மறித்து வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கும்பகோணத்தில் வியாழ சோமேஸ்வரர் கோயில் உள்ளது. குருஸ்தானத்தில் மகாமகத்திற்கு தொடர்புடைய கோயிலாகும். இந்த கோயில் பொற்றாமரை குளத்துக்கு முன்பும், சாரங்கபாணி சுவாமி கோயிலின் தென்புறத்திலும், கும்பேஸ்வரர் கோயில், ராமசாமி கோயில், நாகேஸ்வரன் கோயில், உச்சிபிள்ளையார் கோயில் அருகில் உள்ளது. கும்பகோணம் பகுதி கோயில்களுக்கு வரும் பக்தர்கள், கும்பேஸ்வரர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு வியாழசோமேஸ்வரர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வர்.

தற்போது மார்கழி மாதம் துவங்கியுள்ள நிலையில் வியாழ சோமேஸ்வரர் கோயிலுக்கு தினம்ேதாறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.கும்பகோணம் வியாழசோமேஸ்வரர் கோயிலின் கிழக்குவாசல் வழியாக பக்தர்கள் சென்று கொடிமரத்தை தரிசனம் செய்து விட்டு மூலவர், அம்பாளை வணங்குவர். ஆனால் கோயிலின் கிழக்கு கோபுரவாசல் முன்புள்ள வணிக நிறுவனங்களின் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாதவாறு பாதையை மறித்து நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

இக்கோயிலின் முன்புற பகுதியில் உள்ள சந்து வழியாக சாரங்கபாணி சுவாமி கோயிலுக்கு செல்வதற்கு பாதை இருந்தும் அதையும் மறித்து வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால் சாரங்கபாணி கோயிலுக்கு சுற்றி செல்ல வேண்டி இருப்பதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் பக்தர்கள் தெரிவித்தால் வணிக நிறுவனங்களிடம் கோயில் பாதையை மறித்து வாகனங்களை நிறுத்த கூடாது என்று பலமுறை கூறியும் அவர்கள் மதிக்காமல் இருந்து வருகின்றனர். போலீசாரிடம் தெரிவித்தும் பயனில்லை. எனவே வியாழ சோமேஸ்வரர் கோயில் பாதையை மறித்து நிறுத்தும் வணிக நிறுவனங்கள் மீது அபராதம் செலுத்தி இனிவரும் காலங்களில் கோயிலை மறித்து வாகனங்கள் நிறுத்தாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kumbakonam Someswarar ,parking lot ,devotees ,
× RELATED பாலத்தில் மோதி கார் நொறுங்கியது 4 பக்தர்கள் பரிதாப பலி