×

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை இழுபறி என்டிசி தொழிற்சங்க நிர்வாகிகள் மத்திய அமைச்சரை சந்திக்க டெல்லி பயணம்

கோவை,டிச.18: என்டிசி தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை 5  மாதத்திற்கு மேலாகியும் முடிவு காணப்படாத நிலையில், எல்பிஎப், சிஐடியு, காங்கிரஸ், ஏடிபி தொழிற்சங்க நிர்வாகிகள் டெல்லியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சரை சந்தித்து முறையிடுகின்றனர். தேசிய பஞ்சாலை  கழகத்திற்குட்பட்ட கோவையில் 5 மில்கள் உட்பட தமிழகத்தில் 7 மில்கள் உள்ளது.  இதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த மே மாதத்துடன் சம்பள ஒப்பந்தம்  முடிந்தது. புதிய சம்பள ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுகடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் 12ம் தேதி வரை 8 முறை நடந்தது. இதில் என்டிசி நிர்வாகம், தொழிற்சங்கத்திற்கும் இடையேயும், மத்திய தொழிலாளர் துறை  மண்டல கமிஷனர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சு நடந்தது. இதில் எல்பிஎப் தலைமையிலான ஐஎன்டியுசி, சிஐடியு, ஏடிபி சங்கத்தினர் ரூ.3,500  கோரினர்.

இதற்கு என்டிசி நிர்வாகத்தினர் உடன்படவில்லை. பின்னர் மீண்டும் முத்தரப்பு பேச்சு மதுரையில் உள்ள மத்திய தொழிலாளர் துறை  மண்டல கமிஷனர் அண்ணாதுரை முன்னிலையில், கடந்த 6ம் தேதி மற்றும் 7ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ரத்து செய்யப்பட்டது.
இதனால் தொழிற்சங்க நிர்வாகிகள் ஏமாற்றமடைந்தனர். என்டிசி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தைக்கு வர விருப்பமில்லாததால், ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், இப்பிரச்னைக்கு தீர்வு காண, எல்பிஎப், சிஐடியு, காங்கிரஸ், ஏடிபி ஆகிய தொழிற்சங்கத்தினர் டெல்லி கிளம்பியுள்ளனர். அங்கு நாளை (19ம் தேதி) மத்திய ஜவுளித்துறை அமைச்சர், செயலாளர் ஆகியோரை டெல்லியில் சந்தித்து முறையிடுகின்றனர்.

இது குறித்து என்டிசி மில்களின் எல்பிஎப், சிஐடியு, காங்கிரஸ், ஏடிபி ஆகிய  சங்க கூட்டமைப்பின் தலைவர் பார்த்தசாரதி கூறுகையில், எல்பிஎப் சார்பில் பார்த்தசாரதி, சிஐடியு சார்பில் பத்மநாபன், ஐஎன்டியுசி சார்பில் சீனிவாசன், எல்பிஎப் சார்பில் கோபால் ஆகியோர், எம்.பி.,க்கள் ரங்கராஜன் (மா.கம்யூ.), இளங்கோவன் (திமுக), வேணுகோபால் (அதிமுக) ஆகியோரை அழைத்து கொண்டு, நாளை மத்திய ஜவுளித்துறை அமைச்சர், செயலாளர் மற்றும் என்டிசி தலைவர் ஆகியோரை சந்தித்து, சம்பள உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தும்படி வலியுறுத்துகிறோம். மேலும், என்டிசி மில்களை நவீனப்படுத்தாததால், நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் கோருகிறோம்.’ என்றார்.

Tags : NTC ,trade union executives ,Delhi ,Union Minister ,
× RELATED ஒன்றிய அரசால் முடக்கப்பட்ட என்டிசி...