×

பெய்ட்டி புயல் ஆந்திர எல்லையில் கரையை கடப்பதால் கிருஷ்ணாம்பட்டினம் துறைமுகத்தில் காசிமேடு மீனவர்கள் 300 பேர் தஞ்சம்

காசிமேடு: பெய்ட்டி புயல் ஆந்திர எல்லையில் கரையை கடப்பதால், காசிமேடு மீனவர்கள் 300 பேர், கிருஷ்ணாம்பட்டினம் துறைமுகத்தில் தஞ்சமடைந்துள்ளனர் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன் 100 விசைப்படகுகளில் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இதற்கிடையில் தமிழகத்தில் புதிதாக பெய்ட்டி புயல் உருவானது. இந்த புயல் ஆந்திர மாநிலத்தில் கரையை நேற்று மதியம் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதையொட்டி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும். நெடுந்தொலைவில் உள்ளவர்கள், அருகில் உள்ள துறைமுகங்களில் தஞ்சமடையும்படி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புயல் காரணமாக நேற்று முன்தினம் அதிகாலை முதல் மாலை வரை வடசென்னை பகுதியில் உள்ள காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. சுமார் 10 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்து, கடல்நீரை தடுக்கும் பாறைகளில் மோதியது. இதனை காண ஏராளமான பொதுமக்கள் அங்கு சென்றனர். அனைவரும், தங்களது செல்போன்களில், அதை வீடியோவாக பதிவு செய்தனர்.

இந்நிலையில், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 100 விசைப்படகுகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற 300 மீனவர்கள், ஆந்திர மாநிலம் கிருஷ்ணாம்பட்டினம் துறைமுகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக, காசிமேடு மீன்வளத்துறை அலுவலகத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அங்கு தஞ்சமடைந்தவர்களின் பெயர் பட்டியலை பெற்ற மீன்வளத்துறை அதிகாரிகள், ஆந்திர மாநிலத்தில் மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக காசிமேடு மீனவர்களின் குடும்பத்தினரிடம் கூறினர். மேலும், புயல் கரையை கடந்த பின்னர், அனைவரும் பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள் என தெரிவித்தனர்.

Tags : pilgrims ,fishermen ,Kasimedu ,Krishnamapattinam ,Baiti ,border ,Andhra ,storm ,
× RELATED உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டதால்...