×

திருத்தணி அரசு கல்லூரிக்கு ₹3.86 கோடியில் புதிய கட்டிடம்

திருத்தணி டிச.18: திருத்தணி அரசு கல்லூரிக்கு ரூ.3.86 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. திருத்தணி அரசு கலைக்கல்லூரியில் தமிழ்,  தெலுங்கு, ஆங்கிலம், கணிதம், வணிகவியல், இயற்பியல் வணிகவியல், கணினி, வரலாறு, பொருளியல் மற்றும் கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. 2700 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கல்லூரியில், 32 பேர் நிரந்தர பேராசிரியர்கள், 8 பேர் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து பணிமாறுதல் பெற்றவர்கள், 36 கவுரவ விரிவுரையாளர்கள் என தற்போது மொத்தம் 76 பேராசிரியர்கள் உள்ளனர். ஆனால், தற்போதுள்ள பாடப்பிரிவுகளுக்கு  மொத்தம் 98 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். அதேபோல் அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 18 பேருக்கு 7 பேர் மட்டுமே உள்ளனர். துப்புரவாளர்கள் ஒருவர்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கல்லூரியில் அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர் மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய தாலுகாவில் உள்ள மாணவ, மாணவியர் சேர்ந்து படிக்கின்றனர். பிளஸ்2வில் அறிவியல் பாடப் பிரிவுகளில் சேர்த்து படிக்கும் மாணவர்களுக்கு திருத்தணி அரசு கலைக்கல்லூரியில் சேர வாய்ப்பு இல்லை.
அறிவியல் பாடப்பிரிவுகளான வேதியியல், தாவரவியல், விலங்கியல் போன்ற பாடப் பிரிவுகள் இன்னும் தொடங்கவில்லை. இதனால், அறிவியல் பாடம் படித்த மாணவர்கள் வரலாறு, இந்திய பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் சேர வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

திருத்தணி அரசுக் கல்லூரியில் வேதியியல், தாவரவியல், விலங்கியல் போன்ற அறிவியல் பாடப் பிரிவுகள் புதிதாக துவங்க வேண்டும் என்றால் கல்லூரியில் போதிய வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வகங்கள் போதாது என பல்கலைக்கழகம் சார்பில் கூறப்பட்டது. எனவே, மேற்கண்ட பாடப் பிரிவுகள் துவங்குவதற்கு போதிய கட்டிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரி நிர்வாகம் பல்கலைக்கழகத்திற்கும், அரசுக்கும் பரிந்துரை கடிதம் அனுப்பி வந்தது.

இந்நிலையில்,  கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் 16 வகுப்பறைகள், மூன்று ஆய்வகங்கள் கட்டுவதற்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு கட்டிட திட்டத்தின் கீழ், 3.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டது. புதிய கட்டிடம் பணிகள் கடந்த ஜூன் 21ம் தேதி துவங்கி துரித வேகத்தில் நடந்து வருகிறது. தற்போது, 50 சதவீதத்திற்கு மேல் பணிகள் முடிந்துள்ளன. அடுத்த கல்வியாண்டிற்குள் ரூ.3.86 கோடியில் கட்டிடப்பணிகள் முழுமையாக முடிந்து கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்க பொதுப்பணித்துறையினர் தீர்மானித்துள்ளனர்.

Tags : building ,Government College ,Tiruttani ,
× RELATED கோணம் அரசு பொறியியல் கல்லூரியில்...