×

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை பணி ‘விறுவிறு’

திருவள்ளூர், டிச. 18: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் விறுவிறுவென நடந்து வருகிறது. சென்னை - திருவள்ளூர் - திருத்தணி மற்றும் வேலூர், காட்பாடி வழியாக திருப்பதி, ரேணிகுண்டா, புத்தூர், மும்பை, பெங்களூரு, புதுடெல்லி விரைவு ரயில்களும், புறநகர் ரயில்கள், சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், புறநகர் ரயில்கள் மட்டும் 170 நடைகள் சென்று திரும்புகின்றன.  இந்த ரயில்களில் நாள்தோறும் திருவள்ளூர் பகுதிகளில் இருந்து தனியார் நிறுவனப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், மாணவ, மாணவியர் என ஒரு லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர்.

 இதன் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு ஆண்டுதோறும் ரூ.15 கோடி வரை வருவாய் கிடைத்து வருகிறது.  இப்பாதையில் அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், அதேபோல், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சென்னையில் இருந்து வருவோரும், திருத்தணி, வேலூர், காட்பாடியில் இருந்து வருவோரும் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வருகின்றனர்.
 அப்போது, 6 நடைமேடைகள் உள்ள திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருபுறமும் தண்டவாளத்தை அடிக்கடி கடந்துதான் பெண்களும், குழந்தைகளும் செல்ல வேண்டியுள்ளது.

மேலும், பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மயானத்திற்குச் செல்லவும் இந்த ரயில் நிலைய தண்டவாளத்தை கடந்துதான் மணவாளநகர் ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டியுள்ளது. அப்போது பொதுமக்கள் அதிகம் பேர் செல்வதால் தண்டவாளத்தை கடக்கும் போது எதிர்பாராதவிதமாக விபத்துகளில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது.  இதையடுத்து, ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த 2016ல் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.

தொடர்ந்து, கருத்துரு தயாரிக்கப்பட்டு, சுரங்கப்பாதை அமைக்க, ரயில் நிலையம் அருகே பெரியகுப்பம் பகுதியில், கர்டர்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுவென நடந்து வருகிறது. இப்பணிகள் வரும் 3 மாதத்திற்குள் முடிக்கப்படும். தொடர்ந்து, ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை எடுத்து, கர்டர்கள் இணைக்கப்பட உள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Tiruvallur ,railway station ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...