×

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பொதுமக்களுக்கு முதல்வர் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

நாமக்கல், டிச.16: பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் ஊழலற்ற ஆட்சியை பிரதமர் மோடி கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர், ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து தவறான தகவல்களை கூறி வந்தனர். தற்போது உச்சநீதிமன்றம் ரபேல் ஒப்பந்தம் நேர்மையாக நடந்துள்ளதாக தீர்ப்பு கூறியுள்ளது. ராகுல்காந்தியால் இந்தியாவில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு அதிகாரிகளிடம் விசாரித்து, அவர்கள் கொடுத்த தகவலை ஆராய்ந்து, இந்த தீர்ப்பை சொல்லி இருக்கலாம். எந்த அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய வேண்டும்.

தமிழக முதல்வர், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறியுள்ளார். சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மக்களுக்கு முதல்வர் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அப்படி நம்பிக்கையை ஏற்படுத்தினால், மக்கள் போராட்டம் நடத்த மாட்டார்கள். மக்கள் எந்த வகையிலும் பாதிப்படைய கூடாது. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கும் பெட்ரோல், டீசல் விலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது. முத்தமிழ் அறிஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பது, அவரது சொந்த விருப்பம். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,Sterlite ,
× RELATED பிறந்தநாள் வாழ்த்து கூறிய...