×

ஊட்டியில் கழிப்பிடமாக மாறிய பஸ் நிலைய வணிக வளாகம்

ஊட்டி, டிச. 16:  ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே நகராட்சி சார்பில் கட்டப்பட்ட கடைகள் திறக்கப்படாமல் உள்ளதால், அந்த கடைகள் பொது கழிப்பிடமாக மாறி வருகிறது. நடைபாதையில் கழிவு நீர் ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  ஊட்டி மத்திய பஸ் நிலையம் பகுதியில் இருந்து தாஸ்பிரகாஷ் பகுதிக்கு செல்லும் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையை பயணிகள் அவசர தேவைகளுக்கு பயன்படுத்தி வந்த நிலையில், அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த கால்வாய் மூடப்பட்டு அங்கு நகராட்சி சார்பில் கடந்த ஆண்டு கடைகள் கட்டப்பட்டன. ஆனால் இந்த கடைகள் இன்று வரை பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது. பயணிகளுக்கு தற்போது வசதியாக மாறிவிட்டது.  கடைகள் மறைவாக உள்ளதால், இப்பகுதி மக்கள் இதனை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், நடைபாதையில் கழிவு நீர் ஓடுகிறது. இதனால், பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வழித்தடத்தில் நடந்து செல்லவே முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம் இப்பகுதிகளில் உள்ள கடைகளை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அவைகளை அகற்றிவிட்டு இலவச சிறு நீர் கழிக்கும் கழிப்பிடம் ஒன்று அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Bus facility ,
× RELATED பஸ் வசதி இல்லாததால் பள்ளிக்கு 3 கிமீ...