×

விஏஓ., ஸ்டிரைக்கால் பணிகள் பாதிப்பு கூடுதல் பொறுப்பு ஏற்க ஆர்ஐ.,க்கள் மறுப்பு

ஈரோடு,டிச.16: கிராம  நிர்வாக அலுவலர்கள் ஸ்டிரைக் பாதிப்பை சமாளிக்க வருவாய் ஆய்வாளர்கள்  கூடுதல் பொறுப்பு ஏற்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதை நிராகரித்துள்ளனர்.  கிராம  நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், இணையதள  இணைப்புடன் கூடிய கணினி வசதி, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,  காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பதவி உயர்வு, பணிப்பாதுகாப்பு  உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக  அலுவலர்கள் சங்கத்தினர் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்த  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6வது நாளாக நேற்றும் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.  இதில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, சத்தி,  கோபி, அந்தியூர், பெருந்துறை, நம்பியூர் உள்ளிட்ட 10 வட்டங்களில் பணியாற்றி  வரும் 187 கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். காலவரையற்ற ஸ்டிரைக்  காரணமாக வருவாய்துறையில் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக  சாதி, வருமான, இருப்பிடம் உள்ளிட்ட சான்றுகள் கேட்டு ஆன்லைன் மூலம்  மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து  வருகின்றனர்.

இந்த சான்றுகளுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் கள விசாரணை  நடத்தி ஒப்புதல் அளித்தால் மட்டுமே அடுத்த கட்டமாக வருவாய் ஆய்வாளரிடம்  அனுப்ப முடியும். தற்போது கிராம நிர்வாக அலுவலர்கள் ஸ்டிரைக்கில்  ஈடுபட்டுள்ளதால் இ சேவை மையங்களில் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது  எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் தேங்கி  கிடக்கின்றன.  இதனிடையே நிலைமையை சமாளிக்க ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள கிராம  நிர்வாக அலுவலரின் பொறுப்பினை கூடுதலாக வருவாய் ஆய்வாளர்கள் கவனிக்க  வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
ஆனால் இதை வருவாய்  ஆய்வாளர்கள் நிராகரித்துள்ளனர். எதிர்காலத்தில் ஏற்படும் சட்ட  சிக்கல்களுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் வருவாய்  ஆய்வாளர்கள் கூடுதல் பொறுப்பு ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Ri ,strike ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து