×

காளையார்கோவில் பகுதியில் மழையின்றி கருகி வரும் பயிர்கள்

காளையார்கோவில், டிச. 16:காளையார்கோவிலை சுற்றியுள்ள பகுதியில் போதிய மழை பெய்யாததால், நெல் விவசாயம் முற்றிலும் பாதித்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றார்கள்.
காளையார்கோவிலை சுற்றியுள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெறும். இந்த வருடம் அவ்வப்போது பெய்த தென்மேற்கு மழையை நம்பி நெல் விதைக்கப்பட்டன. ஆனால் போதிய மழையில்லை. தற்போது வடகிழக்கு பருவமழையும் போதிய அளவு பெய்யவில்லை. தற்போது உள்ள பயிர்களை காப்பாற்ற கண்மாயில் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டன. கிணற்று நீரை வைத்து விளையவைக்க முடியாத அளவுக்கு கிணறுகளும் வறண்டு விட்டன. இந்நிலையில் பயிர்களை மாடுகளை விட்டு மேய்க்க விட்டு வருகின்றார்கள். மேலும் விவசாயம் பொய்த்ததாலும், இரண்டு ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் ஆடு, மாடுகளுக்கு தேவையான வைக்கோல் புல் வகைகள் போன்ற தீவனங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்வி குறியாக உள்ளது. 2016-2017ம் வருடத்திற்கான அரசு வழங்கும் பயிர்காப்பீடு தொகை விவசாயிகளுக்கு இதுவரையிலும் கிடைக்காத நிலையில், தற்போது 2017-2018 வருடத்திற்கான பயிர்காப்பீடு பதிவு நடைபெற்று உள்ளது என்று கூறினார்கள்.

கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கதிரேசன் கூறுகையில், எங்கள் ஊரில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்துள்ளோம். இதுவரைக்கும் ஏக்கருக்கு 8 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். நெற்பயிர் அரை அடி உயரம்தான் வளர்ந்துள்ள நிலையில், போதிய மழையிலாமல் கருகி விட்டது. இனிமேல் மழை பெய்தாலும் முளைக்காத நிலையில், ஆடு, மாடுகளை மேய விட்டுள்ளோம். கடந்த இரண்டு வருடங்களாக கையில் இருந்த விதை நெல் அனைத்தையும் விதைத்து விட்டோம் போதிய மழையில்லாமல் விவசாயம் முற்றிலும் கருகி விட்டது. தற்போது கடைகளில் கடன் வாங்கி விதைநெல் வாங்கி உள்ளோம். கடனை திரும்ப செலுத்துவதற்கு பயிர் இன்சூரன்ஸ் தொகையை எதிர்பார்த்து உள்ளோம் போன வருடத்திற்கான பயிர் இன்சூரன்ஸ் தொகையை  வழங்க வேண்டும் என்று விவசாயி கூறினர்.


Tags : area ,Kalayar Kovil ,
× RELATED நெல்லை மாநகர பகுதியில் சாலையில்...