×

தொடர்ந்து 4வது ஷிப்ட் செய்ய வலியுறுத்தல் அதிகாரிகள் டார்ச்சரால் மயங்கி விழுந்த கண்டக்டர் குடியாத்தத்தில் பரபரப்பு

குடியாத்தம், டிச.16: தொடர்ந்து 4வது ஷிப்ட் செய்யக் கூறி அதிகாரிகள் டார்ச்சர் செய்ததால் கண்டக்டர் திடீரென மயங்கி விழுந்தார். இச்சம்பவம் குடியாத்தத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் குடியாத்தம் அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 12ம் தேதி குடியாத்தம்- காட்பாடி டவுன் பஸ்சில் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து 13ம் தேதியும் அதிகாரிகள் வற்புறுத்தலின்பேரில் பணி செய்தார். பின்னர் மீண்டும் அதிகாரிகள் வற்புறுத்தலின்பேரில் 3வது முறையாக நேற்று முன்தினமும் பணிக்கு சென்றார். தொடர்ந்து 3 ஷிப்ட் பணி செய்த வெங்கடேசன், மாலையில் கலெக்ஷன் பணத்தை பணிமனையில் உள்ள அலுவலகத்தில் செலுத்த ெசன்றார்.

அப்போது அங்கிருந்த அதிகாரிகள், கலெக்ஷன் பணத்தை வாங்க மறுத்து 4வது ஷிப்ட் பணியை தொடரும்படி கூறி உள்ளனர். ஆனால் வெங்கடேசன், ‘தன்னால் தொடர்ந்து ஷிப்ட் பார்க்க முடியவில்லை, கடும் அசதியாக உள்ளது’ என தெரிவித்தாராம். ஆனால் இதை ஏற்க அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதனால் அதிகாரிகளுக்கும், வெங்கடேசனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வெங்கடேசனுக்கு ஆதரவாக மற்ற கண்டக்டர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வெங்கடேசனுக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்தார். உடனடியாக சக பணியாளர்கள் அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Shift ,
× RELATED திகில் கதையில் மம்மூட்டி