×

மாதனூர் அருகே அரசு பள்ளியில் காய்கறி பயிரிட்டு விற்பனை செய்த மாணவர்கள்

ஆம்பூர், டிச.16: மாதனூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் காய்கறி பயிரிட்டு விற்பனை செய்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் பள்ளிகுப்பம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப் பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் நிழல் தரும் மரங்கள், அவரை, பூசணி, பாகற்காய், முருங்கை, கற்பூரவல்லி, தூதுவளை, ரோஜா, வாடாமல்லி, வாழை, வெண்டை போன்ற பல்வேறு தாவரங்களை வளர்த்து வருகிறார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெறும் விவசாய பணியில் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் உரங்கள் இட்டு விவசாயம் செய்தனர். இதில் கிடைக்கும் காய்களை பறித்து சத்துணவு திட்டத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் தற்போது காய்கறி அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் நேற்று 4 பூசணி காய், 3 கிலோ அவரைக்காய் ஆகியவற்றை அறுவடை செய்தனர். அவற்றை நேற்று மாணவர் காய்கறி அங்காடி மூலம் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு விற்பனை செய்து ₹200 நிதி திரட்டினர். இதன்மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு கை கழுவும் சோப்பு மற்றும் விவசாய பணிக்கு தேவையான கருவிகள் வாங்க முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் சேகர் கூறுகையில், ‘இதன் மூலம் மாணவர்கள் விவசாயம், வியாபாரம், குழுவாக செயல்படுதல் போன்றவற்றை கற்றுக்கொள்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு மாதனூர் வட்டாரக் கல்வி அலுவலர் மாதேஷ் பள்ளித் தோட்டத்தில் விளைந்த பூசணியை விலைக்கு வாங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். இப்பள்ளி மாணவர்களின் இயற்கை முறை விவசாயத்தின் மீதான ஆர்வத்தை பலரும் பாராட்டி உள்ளனர்’ என்றனர்.

Tags : government school ,Madanur ,
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட...