×

மக்கள் உறுதி ஆலங்குடி அருகே கீரமங்கலத்தில் மின்சாரம் கேட்டு அலுவலகத்தை மக்கள் முற்றுகை- சாலை மறியல்

ஆலங்குடி, டிச.12: ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மின்சாரம் கிடைக்காத பொதுமக்கள் மின்கம்பம், மின் ஊழியர்கள் கேட்டு மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த நவம்பர் 16ம் தேதி  கஜா புயல் தாக்கியது. இதனால் ஆலங்குடி மற்றும் கறம்பக்குடி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் புயலால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்களும், 300க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் உடைந்து நாசமானது.  கேரளா, ஆந்திரா மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் மின் வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து வெளியூரில் இருந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினார்கள். அதனால் டவுன் பகுதிகளில் மின்சாரம் கிடைத்தாலும் பல்வேறு கிராமங்களில் பொதுமக்களின் வீடுகளுக்கு மின்இணைப்பு கிடைக்காமல் தினம் தினம்  அவதி அடைந்து  வருகின்றனர்.

இந்நிலையில் கீரமங்கலத்தை சுற்றியுள்ள பல்வேறு  கிராமங்களில் மின்சாரம் சீரமைப்பு பணிகளுக்கு வந்தவர்களும் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால் ஒவ்வொரு கிராமத்திலும் மின்வாரிய பணிகள் முடங்கியுள்ளது. இதனால் மின்சாரம் இன்றி குடிநீர் கிடைக்காமலும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் பல்வேறு கிராமங்களில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. 25 நாட்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் பொதுமக்கள்  நேற்று கீரமங்கலம்  மின்வாரிய அலுவலகத்திற்கு வந்து மின்கம்பங்களும், சீரமைக்க மின்சார வாரிய ஊழியர்களும் வேண்டும் என்று பல கிராம மக்கள் மின்வாரிய அலுவலகத்தையும் அதிகாரிகளையும் முற்றுகையிட்டனர். இந்நிலையில் அதிகாரிகளின் பதில் திருப்தி அளிக்காததால் முற்றுகையிட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து வாரிய அதிகாரிகள்  மின்கம்பங்கள் தற்போது  வந்துள்ளதாகவும், அனைத்து கிராமங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும், மேலும் 64 ஊழியர்கள் சீரமைப்பு பணியில் உள்ளதாகவும், அவர்கள் பல குழுக்களாக பிரிந்து சீரமைப்பு பணிகளில் ஈடுபடுவதாக கூறினர்.  64 பேர் எந்த ஊரில் வேலை செய்கிறார்கள் என்று பொதுமக்கள் கேட்க அதிகாரிகள் முறையான பதில் கூறவில்லை. இந்நிலையில் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக அறிவித்த பொதுமக்கள் அனைத்து கிராமங்களுக்கும் மின்கம்பங்களும், சீரமைப்பு பணிக்கு மின்வாரிய ஊழியர்களும் அனுப்பி வைக்க வேண்டும். மறுபடியும் பணியாளர்கள் பற்றாக்குறை என்று கிராமங்களை புறக்கணித்தால் மக்கள் போராட்டம் பெரிய அளவில் இருக்கும் என்று பொதுமக்கள் எச்சரித்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால்  அறந்தாங்கி - பட்டுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : road ,office ,Keeramangalam ,Alangudi ,
× RELATED சீத்தஞ்சேரி கூட்டுச் சாலையில்...