×

சிவகாசியில் புற்றீசலாக பெருகும் ‘நீட்’ பயிற்சி மையங்கள்

சிவகாசி, டிச. 12: சிவகாசியில் புற்றீசல் போல பெருகும் நீட் தேர்வு பயிற்சி மையங்களை கல்வித் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.மருத்துவ படிப்புக்கு தற்போது அகில இந்திய அளவில், நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசின் சிபிஎஸ்சி கல்வி வாரியம் இந்த தேர்வுக்கான வினாத்தாள்களை தயாரிப்பதால், கிராமப்புற அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் வெற்றி பெறுவது அரிதாகி வருகிறது. தமிழக அரசு நீட் நுழைவு தேர்வில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும், நீட் நுழைவு தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பு கானல் நீராகி வருகிறது.
இதனால், மாணவர்கள் தற்போது நீட் நுழைவு தேர்வுக்கு தயாராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சிவகாசியில் தற்போது புற்றீசல் போல நீட் தேர்வு பயிற்சி மையங்கள் உருவாகி வருகின்றன. இவர்கள் கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து திறமையான ஆசிரியர்களை வரவழைத்து நுழைவு தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என கவர்சிகரமாக விளம்பரம் செய்து வருகின்றனர்.

இந்த பயிற்சி மையம் நடத்துபவர்கள் ஆண்டுதோறும் இடத்தை மாற்றி பயற்சி மையத்தின் பெயரையும் மாற்றுகின்றனர். இவர்களின் விளம்பர யுக்திகளை கண்டு, ஏழை பெற்றோர்கள் அதிக பணம் கொடுத்து தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர். பயிற்சி மையங்களை நடத்துவோர் கல்வி துறைக்கு சம்பந்தமே இல்லாதவர்களாக உள்ளனர். வர்த்தக நோக்கத்தில் நீட் தேர்வில் போதிய அனுபவம் இல்லாதவர்களைக் கொண்டு பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றனர். ஒரு சிலர் வெளி மாநிலங்களில் பிரபலமாக உள்ள பயிற்சி மையங்களின் பெயர்களில் முறையான அனுமதியின்றி அந்த நிறுவனங்களின் பெயர்களில் சிவகாசியில் பயிற்சி மையங்களை தொடங்கியுள்ளனர்.

இவர்கள் ஏற்கனவே நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டும் முழு நேர பயிற்சி அளிப்பதாகவும், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த அறிமுக பயிற்சி வகுப்பு நடத்துவதாகவும் விளம்பரப்படுத்தி வருகின்றனர். இவர்களின் கவர்ச்சியான விளம்பரங்களால் நீட் தேர்வு குறித்த விழிப்புணர்வு இல்லாமல், அறியாமையில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அதிக பணம் கொடுத்து பயற்சி மையத்தில் சேர்த்து வருகின்றனர். வர்த்தக நோக்கில் போலியாக செயல்படும் மையங்களை கண்டறிந்து கல்வி துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : training centers ,airspace ,Sivakasi ,
× RELATED சிவகாசி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு