×

அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் நியமிக்க வேண்டும் மாணவர்கள் வலியுறுத்தல்

சிவகங்கை, டிச.12: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்பட உடற்கல்வி ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தொடக்கம் முதல் மேல்நிலை வரை சுமார் ஆயிரத்து 320 பள்ளிகள் உள்ளன. இதில் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படுகிறது. ஒன்றிய அளவில் தொடங்கும் இப்போட்டிகளில் பங்குபெறும் மாணவ, மாணவிகள் தொடர்ந்து வெற்றி பெற்று இந்திய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்குபெறும் தகுதி பெறுகிறார்கள். ஆனால் இந்த போட்டிகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் வெற்றி பெறுவது மிகக்குறைவான அளவிலேயே உள்ளது. பெரும்பாலான பிரிவுகளில் சாம்பியன் பட்டத்தை தனியார் பள்ளிகளே வென்று வருகின்றன.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உடற்கல்வி ஆசிரியர்களே இல்லாத நிலை உள்ளது. உடற்கல்விக்கு அரசுப்பள்ளிகளில் முக்கியத்துவம் இல்லாததால் திறமையும், ஆர்வமும் இருந்தும் மாணவர்கள் விளையாட்டில் சாதிக்க முடியாத நிலை உள்ளது. எனவே அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உடற்கல்வி ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘நடுநிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களே இல்லை. பின்னர் எப்படி உடற்கல்வியில் மாணவர்கள் சாதிக்க முடியும். வாரத்தில் இரண்டு நாட்களில் மொத்தம் ஒன்றரை மணி நேரம் மட்டுமே உடற்கல்வி பாடத்திற்காக ஒதுக்கப்படுகிறது.

இதனால் உடற்கல்வியில் மாணவர்கள் கவனம் செலுத்துவது மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நேரத்திற்குள் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பது என்பதும் ஆசிரியர்களுக்கு சிரமமான பணியாக உள்ளது. இந்த பாடத்திற்கு முறைப்படியான தேர்வுகள் எதுவும் கிடையாது. இதனால் உடற்கல்வி என்பது சம்பிரதாயமான ஒரு பாடமாக மட்டுமே இருக்கும் சூழ்நிலை உள்ளது. அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப உடற்கல்வி ஆசிரியர், இயக்குநர்கள் நியமனம் செய்யவேண்டும். தனியார் பள்ளிகளைப்போல் அரசுப்பள்ளிகளிலும் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும். பள்ளிகளில் தினமும் உடற்கல்வி பாடத்திற்கு நேரம் ஒதுக்கி படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இந்த பாடத்திற்க்கும் கொடுக்கவேண்டும்’’ என்றனர்.

Tags : physician teacher ,government schools ,
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...