×

சர்வர் சரியில்லை வாரிசு சான்றிதழ் பெற முடியாமல் தவிப்பு

சிவகங்கை, டிச. 12: மாவட்டத்தில் வாரிசு சான்றிதழுக்கான அரசு இணையதள சர்வர் சரிவர இயங்காததால் சான்றிதழ் பெற முடியாமல் ஏராளமானோர் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் முழுவதும் மின் ஆளுமை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து தாலுகா அலுவலகம், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, பேரூராட்சி, நகராட்சி அலுவலகம், பொதுசேவை மையம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இதற்கான இசேவை மையங்கள் உள்ளன. இத்திட்டம் மூலமே சாதி, வருமானம், இருப்பிடம், முதல் பட்டதாரி சான்று, ஆதரவற்ற விதவை சான்று, பத்தொண்ணு உள்ளிட்ட வருவாய்த்துறை மூலம் பெறப்படும் சான்றுகளை பெறலாம். அரசின் பல்வேறு நிதியுதவி திட்டம், பாஸ்போர்ட் பெற விண்ணப்பம், எல்ஐசி தவணை செலுத்துதல் உள்ளிட்டவைகளும் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

வருவாய்த்துறையினரிடம் நேரடியாக விண்ணப்பித்து வாரிசு சான்றிதழ்கள் பெற்று வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆன் லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் ஆன்லைனில் வாரிசு சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களை இணைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கான சர்வரில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆவணங்களை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடிகிறது. இதனால் எஞ்சிய ஆவணங்களை வருவாய்த்துறையினரிடம் நேரடியாக வழங்க வேண்டும். இது இரண்டு வேலையாக உள்ளது.
இதற்கான சர்வர் பெரும்பாலான நாட்கள் முடக்கப்பட்டுள்ளது. சில நாட்கள் இரவுநேரங்களில் மட்டுமே இயங்குவதால் அந்த நேரத்தில் மட்டுமே விஏஓ, ஆர்ஐ, தாசில்தார் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து தேவையான ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சான்றிதழ் கிடைக்க தாமதம் ஏற்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் கூறியதாவது: ‘‘பென்சன், பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு வாரிசு சான்று முக்கியமானதாகும். பிற சான்றிதழ்களுக்கு அளிக்கும் ஆவணங்கள் போல் வாரிசு சான்றுக்கு இல்லை. இதற்கு கூடுதல் ஆவணங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால் அதற்கு தேவையான வசதி சர்வரில் இல்லை. இதனால் குழப்பம் ஏற்படுகிறது. சர்வரும் இயங்காத நிலையில் இருப்பதால் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags :
× RELATED அதிவேகமாக செல்லும் பஸ்கள்