×

பரமக்குடி ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் அமைக்கும் பணியில் தொய்வு

பரமக்குடி, டிச.12: பரமக்குடி ரயில் நிலையத்தில் நடைபாதை அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு இல்லாமல் தண்டவாளங்களை பயணிகள் கடந்து வருகின்றனர். பரமக்குடி ரயில் நிலையத்திற்கு முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி மற்றும் இளையான்குடி பேன்ற பகுதியில் இருந்து தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். பரமக்குடி வழியாக சென்னை, திருச்சி, காரைக்குடி, தஞ்சாவூர், திருப்பதி போன்ற முக்கியமான நகரங்களுக்கு 18 ரயில்கள் வந்து செல்கிறது. அகல ரயில் பாதையாக மாற்றம் செய்த போது இரண்டு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டது. தற்போது ரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு அதிவேக ரயில்கள் நிற்கும் நடைமேடை இல்லாமல் இறங்குவதற்கும், ஏறுவதற்கும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் நடைமேடை தூரம் அதிகரிக்கப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது. மதுரை மற்றும் சென்னை செல்லும் ரயில்கள் 4வது பிளாட்பாரத்தில் நிற்பதால் பயணிகள் ஆபத்தான முறையில் ரயில் பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

ரயிலை பிடிப்பதற்காக ரயில் பாதையை கடக்க முயன்றபோது பயணிகள் விபத்துக்குள்ளான சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆகையால் நடைமேடை பணிகளை விரைவு படுத்தி முதல் நடைமேடையில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் நடைபாதை மேம்பாலத்தில் படிக்கட்டுகள் சேதமடைந்து உள்ளதால், நடக்கும்போது எப்போது விழுமோ என்ற பயத்தில் பயணிகள் உள்ளனர். ஆகையால் நடைமேடை பாலத்தில் சேதமடைந்த பகுதியை உடன் சரி செய்ய ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து சாமுவேல் பாண்டித்துரை கூறுகையில், பரமக்குடி ரயில் நிலையத்திற்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ரயில் வரும் நேரத்தில் அதிகமான பயணிகள் மற்றும் பயணிகளை வழியனுப்ப வருபவர்கள் அதிகமாக வருகின்றனர். நான்காவது பிளாட்பாரத்தில் ரயில் நிற்பதால், ரயிலை பிடிப்பதற்காக சிலர் மேம்பாலத்தை பயன்படுத்தாமல் குறுக்கு வழியாக ரயில் பாதையை கடந்து வருகின்றனர்.இதனால், உயிர்கள் பலியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ரயில்வே நிர்வாகம் அசம்பாவிதம் நடப்பதற்குள் நடைபாதை பணிகளை தீவிரப் படுத்தவேண்டும் என கூறினார்.

Tags : Paramakudi Railway Station ,
× RELATED பரமக்குடி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு பயன்படாத சுகாதார நிலையம்