×

1000 ஆண்டுகள் பழமையான காசி விஸ்வநாதர் கோயில் புதுப்பிக்கப்படுமா?

தரங்கம்பாடி,டிச.11: தில்லையாடியில் 1000 ஆண்டு பழமையான காசி விஸ்வநாதர் கோயில் சிதிலமடைந்து கோயில் என்ற உருவமே இல்லாமல் காடுமண்டி கிடக்கிறது. அந்த கோயிலை புதுப்பித்து புதிதாக கட்ட வேண்டும் என்று அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 1000 ஆண்டுகளுக்கு முன்பு தில்லையாடி, தேவாணூர், பொறையார், கொட்டுபாளையம், ஒழுகைமங்கலம், ஆகிய 5 ஊர்களிலும் ஒரே மாதியான விசாலாட்சி அம்மன் உடனாகிய காசிவிஸ்வநாதர் கோயில் கட்டப்பட்டது. பொறையார் மற்றும் தேவாணூரில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. ஒழுகைமங்கலம் மற்றும் கொட்டுபாளையத்தில் உள்ள கோயில்கள் சீர்கெட்டு இருந்தாலும் பக்தர்கள் சென்று வழிபடும் அளவிற்கு உள்ளது. ஆனால் தில்லையாடியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில் முழுமையாக உருதெரியாமல் சிதிலமடைந்து கோயிலை சுற்றி காடு மண்டி கிடக்கிறது. அதனால் பக்தர்கள் சென்று வழிபட முடியாத நிலை உள்ளது.

இது குறித்து கோயிலுக்கு பூஜை நடத்தும் சிவாச்சாரியார் பாலமணி அய்யர் கூறியதாவது,  காசிக்கு சென்று வழிபாடு செய்யும் பலன் தில்லையாடி உள்ளிட்ட 5 ஊர்களில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு சென்று வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் தில்லையாடியில் உள்ள கோயில் மட்டும் மிகவும் மோசமாக சீர்கெட்டு பக்தர்கள் வழிபாடு செய்ய  முடியாத நிலையில் உள்ளது. கோயில் முழுமையாக இடிந்து விழுந்து கற்பகிரகம் மட்டும் உள்ளது. அங்கு காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன், விநாயகர், முருகன், பைரவர், குருபகவான், உள்ளிட்ட சிலைகளும் உள்ளன. கோயிலுக்கு சொந்தமாக 33 ஏக்கர் நிலம் உள்ளது. அதனால் கிடைக்கும் வருமானம் கோயிலுக்கு வருவதில்லை.

இந்து சமய அறநிலையத்துறை இந்த கோயிலுக்கு 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து அதில் கிடைக்கும் வட்டி பணத்தில் இருந்து ஒரு கால பூஜை செய்ய பல வருடங்களுக்க முன் அறிவித்தது. இப்போது மாதம் 232 ரூபாய் தான் ஒரு கால பூஜைக்கு கொடுக்கபடுகிறது. இந்த பணத்தில் எப்படி  தினமும் பூஜை நடத்த முடியும். என்னால் முடிந்த அளவு பூஜை நடத்தி வருகிறேன். அரசும், அறநிலையத்துறையும், ஊர் பொதுமக்களும் ஒன்றினைந்து  உடனடியாக காசி விஸ்வதாருக்கு புதிய ஆலயம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags : Kasi Vishwanath Temple ,
× RELATED ஞானவாபி மசூதியை சுற்றி துணை ராணுவ படையினர் குவிப்பு