×

மரக்காணம் அருகே போராட்டம் நடத்த திரண்ட பொதுமக்கள்

மரக்காணம், டிச. 11:     மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்டது முருக்கேரி. இப்பகுதியில் உள்ள வேங்கடத்தம்மன் கோயில் அருகில் கல்லாம் கொல்லை எனப்படும் பகுதியில் அரசு இடம் 2 ஏக்கர் உள்ளது. இந்த இடத்தின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறுகின்றனர். இங்குள்ள பொது இடத்தில் தான் இப்பகுதியில் உள்ளவர்கள் சாமி ஊர்வலம் மற்றும் பொங்கல் பண்டிகையின் போது மஞ்சு விரட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை வழக்கமாக நடத்தி வந்துள்ளனர். ஆனால் இந்த பொது இடத்தை அப்பகுதியில் உள்ள ஒரு தனிநபர் சில ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பு செய்து விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனால் அரசு ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

 இந்நிலையில் இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி முருக்கேரி பகுதி பொதுமக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டு வேங்கடத்தம்மன் கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். இது பற்றி தகவலறிந்த மரக்காணம் வட்டாட்சியர் தனலட்சுமி, மண்டல துணை வட்டாட்சியர் ஏழுமலை மற்றும் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இந்த இடத்தில் நாங்கள் மஞ்சு விரட்டு நடத்துவோம். ஆனால் ஆக்கிரமிப்பால் அது தடையாக உள்ளது. இதுபோல் முருக்கேரியில் பொது இடம் இல்லாததால் கருமகாரிய கொட்டகை, அங்கன்வாடி மையம் போன்றவை இல்லை. இதனால் இங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்றி மேற்குறிப்பிட்ட கட்டிடங்கள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இதையடுத்து, வட்டாட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், போலீசார் இடத்தை பார்வையிட்டு அரசு ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த இடம் அரசுக்கு சொந்தமான கல்லான் கொல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் னுமதியுடன் ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அரசு அதிகாரிகளின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

Tags : protest ,Marakkanam ,
× RELATED மதுரை பேரையூர் அணைக்கரைப்பட்டியில் 2...