×

ஊட்டி செல்ல 3வது பாதையான கோவை- மஞ்சூர் சாலையை சீரமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு

மஞ்சூர், டிச.11:  ஊட்டி செல்வதற்கான மூன்றாவது பாதையாக அறிவிக்கப்பட்ட கோவை- மஞ்சூர் சாலை சீரமைப்புக்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் தெரிவித்தார்.  நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை, முள்ளி, வெள்ளியங்காடு, காரமடை வழியாக கோவைக்கு சாலை வசதி உள்ளது. நீண்ட காலமாக போக்குவரத்து பயன்பாட்டில் இருந்து வரும் இந்த சாலையை சீரமைத்து ஊட்டியில் இருந்து மஞ்சூர் வழியாக கோவைக்கு மூன்றாவது பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த ஏழாண்டுகளுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை மூன்றாவது மாற்று பாதைக்கான திட்டம் செயல்படுத்தப்படாமல் முடங்கியுள்ளது.  இந்நிலையில் ஏற்கனவே இந்த சாலை மிகவும் பழுதடைந்திருந்த நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளில் தற்காலிக சீரமைப்பு பணி கூட மேற்கொள்ளாததால் சாலை மேலும் சீர்குலைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக பெரும்பள்ளம் முதல் வெள்ளியங்காடு வரை சுமார் 30 கி.மீ துாரம் சாலை மிகவும் மோசமடைந்து உள்ளது. சாலையில் பெரும்பாலான இடங்களிலும் ஜல்லி கற்கள் பெயர்ந்து பெரிய அளவில் குழிகள் ஏற்பட்டுள்ளதால் இவ்வழியாக இயக்கப்படும் வாகனங்கள் அடிக்கடி டயர் பஞ்சர் மற்றும் இயந்திர கோளறுகள் ஏற்பட்டு நடுவழியில் நின்று விடுவது வாடிக்கையாக உள்ளது. சாலையின் இருபுறங்களிலும் முட்ெடிகள் புதர்போல் வளர்ந்து சாலையின் பெரும் பகுதியை ஆக்ரமித்துள்ளது. இதன் காரணமாக பெரும்பாலனோர் இச்சாலையில் பயணம் செய்வதை தவிர்த்து பலரும் குன்னூர், பர்லியார் வழியாக கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் காலவிரயமும், கூடுதல் செலவினங்களும் ஏற்படுகிறது.


இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக மாவட்ட அவைதலைவர் பில்லன் தலைமையில் மஞ்சூரில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி முதற்கட்டமாக மூன்றாவது பாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுநல அமைப்பினர் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட திவ்யாவிடம் நேரில் மனு கொடுத்தார்கள். மனுவில் கோவை- மஞ்சூர் இடையே உள்ள சாலை கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. புயல், மழை போன்ற பேரிடர் காலங்களில் அவசர அத்தியாவசிய போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டும் கடந்த 2011ம் ஆண்டு தமிழக சட்டமன்ற கூட்டத்தில் 110விதியின் கீழ் ஊட்டியில் இருந்து மஞ்சூர், கெத்தை, காரமடை வழியாக கோவைக்கு மூன்றாவது பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை மூன்றாவது பாதை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சாலையில் தற்காலிக சீரமைப்பு பணிகள் கூட மேற்கொள்ளப் படுவதில்லை. இதனால் சாலை மிகவும் மோசமாக காட்சியளிக்கிறது.


உடனடியாக சாலை யை சீரமைத்து மூன்றாவது பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் மூன்றாவது பாதை குறித்து அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான புத்திசந்திரன் கூறியதாவது, ஊட்டியில் இருந்து மஞ்சூர், கெத்தை, வெள்ளியங்காடு, காரமடை வழியாக கோவைக்கு மூன்றாவது பாதை அமைப்பதற்கான நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக சாலை சீரமைப்பு பணி துவங்க உள்ளது. நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதியான மஞ்சூர் முதல் பெரும்பள்ளம் வரை சாலை நன்றாக உள்ளது. இந்நிலையில் பெரும்பள்ளத்தில் இருந்து வெள்ளியங்காடு வரையிலான சாலையை சீரமைக்க மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சின்னராஜ், அமைச்சர் வேலுமணி ஆகியோரின் நடவடிக்கையால் ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கான டெண்டர் விடும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளதால் விரைவில் இந்த சாலை சீரமைக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் சாலை சீரமைப்பு பணி குறித்து ஆய்வு நடத்தினார்கள்.

Tags : road ,Ooty ,Coimbatore-Manjur ,
× RELATED ஊட்டி-கூடலூர் சாலையில் கார் தீப்பற்றி எரிந்தது; 5 பேர் உயிர் தப்பினர்