×

கோமாரி நோய் பரவுவதை தடுக்க கால்நடை சந்தை மேலும் 2 வாரம் நிறுத்தி வைப்பு கலெக்டர் அறிவிப்பு

சேலம், டிச. 7: கோமாரி நோய் பரவுவதை தடுக்க, சேலம் மாவட்டத்தில் கால்நடை சந்தைகள் மேலும் 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:  சேலம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவுவதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நோய் பாதித்த கால்நடைகளை விற்கவும் கூடாது, வாங்கவும் கூடாது என விவசாயிகளுக்கு கால்நடை மருத்துவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.பருவ நிலை மாற்றங்களாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாலும், கால்நடைகளில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள கால்நடை சந்தைகளுக்கு வெளியூர்களிலிருந்து கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. மேலும், ஒரு கால்நடையிடமிருந்து மற்றொரு கால்நடைக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் சந்தைகளிலிருந்து தொற்று நோய் உள்ள கால்நடைகளை வாங்கினால் மற்ற இடங்களில் உள்ள கால்நடைகளுக்கும் நோய்பரவும் வாய்ப்பு உள்ளது.எனவே, தொற்று நோய் பரவாமல் இருக்க சேலம் மாவட்டத்தில் நடத்தப்படும் மின்னாம்பள்ளி (பிரதி வாரம் திங்கள்கிழமை) முத்துநாயக்கன்பட்டி (பிரதி வாரம் வெள்ளிக்கிழமை) மற்றும் வீரகனூர் (பிரதி வாரம் சனிக்கிழமை) கால்நடை சந்தைகளை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. கால்நடைகளுக்கு நோய் தாக்கம் ஏற்படாமல் தடுக்க சேலம் மாவட்டத்தில் மேலும் 2 வாரங்களுக்கு  22ம் தேதி வரை கால்நடை சந்தைகளை நிறுத்தி வைக்க ஆணையிடப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : park deposit collector announcement ,spread ,
× RELATED மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற அவதூறு...