×

இந்தியன் வங்கி சார்பில் பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி, டிச.7: கிருஷ்ணகிரி அணையில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் ராமஜெயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், அனுபவம் மிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கிறது. இப்பயிற்சியில் தொழிலை கற்றுக்கொள்வதுடன், மென்திறன்கள் குறித்த செயல்முறை பயிற்சிகள், வங்கிகள் வழங்கும் சேவைகள் குறித்த விழிப்புணர்வு, சந்தை ஆய்வு செய்தல், திட்ட அறிக்கை தயாரித்தல் போன்ற பயனுள்ள திறன்களை பெறலாம். அத்துடன் தொழில் முனைவோர், வங்கி மேலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பை பெறலாம். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு தொழில் துவங்க வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குதல், திறன் மேம்படுத்தும் பயிற்சி போன்ற சேவைகளும் பயிற்சிக்கு பின்பு இரண்டு ஆண்டுகளுக்கு கட்டணமில்லாமல் அளிக்கப்படுகிறது.

தற்போது, 30 நாட்களுக்கான அழகுக்கலை பயிற்சி நடத்தப்படவுள்ளது. இதில் பங்கேற்று பயன்பெற விரும்புவோர் வரும் 20ம் தேதிக்குள் இயக்குநர், இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டிடம், கே.ஆர்.பி. டேம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதில், 35 பயிற்சியாளர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். 18 வயது முதல் 45 வயது வரையுள்ள, தமிழில் எழுத-படிக்க தெரிந்த பெண்கள் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். சுய உதவிக்குழுக்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள பெண்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Indian Bank ,women ,
× RELATED காஞ்சிபுரத்தில் இந்தியன் வங்கி...