×

கோடை சீசனுக்கு தயாராகிறது ரோஜா பூங்கா

ஊட்டி,டிச.7:முதல் சீசனுக்காக ஊட்டி ரோஜா பூங்கா தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், ரோஜா செடிகள் தற்போது கவாத்து செய்யும் பணி துவக்கப்பட்டள்ளது.
ஊட்டிக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் போன்ற பகுதிகளுக்கு கண்டு செல்கின்றனர்.  நாள் தோறும் சுற்றுலா பயணிகள் வந்தாலும், பொதுவாக கோடை சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அப்போது வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காகவும், மகிழ்விப்பதற்காகவும் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் நடத்தப்படுகிறது. ரோஜா பூங்காவில் நடத்தப்படும் ரோஜா கண்காட்சியின் போது, அங்குள்ள 40 ஆயிரம் செடிகளில் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கும். 40 வகையான ரோஜா செடிகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த செடிகளில் பூத்துக் குலுங்கும் ரோஜாக்களை காணவே வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், கோடை சீசன் ஏப்ரல் மாதம் துவங்கும் நிலையில், அதற்காக தற்போது அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணிகள் தற்போது துவங்கி மும்முரமாக நடந்து வருகிறது. ஊட்டி ரோஜா பூங்காவிலும், கோடை சீசனுக்கான பணிகள் தற்போது துவங்கியுள்ளது. முதற்கட்டமாக பூங்காவில் உள்ள மேல் பாத்திகளில் உள்ள அனைத்து ரோஜா செடிகளும் கவாத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த செடிகளுக்கு தற்போது இயற்கை உரமிடும் பணிகளும் துவக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கீழ் பாத்திகளிலும் படிப்படியாக கவாத்து செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் ஏப்ரல் மாதம் வரை ரோஜா பூங்காவில் பூக்களை பார்க்க முடியாது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள அலங்கார செடிகள் மற்றும் டேபிள் ரோஸ் போன்ற மலர்களை மட்டுமே காண முடியும்.

Tags : Rose Garden ,summer season ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்கா மேம்பாட்டு பணி தீவிரம்