கொசுக்களால் பரவி வரும் காய்ச்சல் வேடிக்கை பார்க்கும் சுகாதார துறை

ராமநாதபுரம், டிச.6: ராமநாதபுரம் நகர் பகுதியில் கொசுத் தொல்லை அதிகரித்து வருவதால், நோய்கள் பரவி வருகிறது. சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மாவட்டத்தில் புயல் அறிவிப்பால் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ராமநாதபுரம் நகர் பகுதியில் தாழ்வான பல இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. மழைநீரில் கொசு உற்பத்தி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கொசு தொல்லையால் வசந்தம் நகர், லெட்சுமிபுரம் ஊரணி, பாம்பூரணி, சக்கரக்கோட்டை, நேரு நகர், இபுராகிம் சேட் நகர், பட்டினம்காத்தான், டி.பிளாக் வீட்டு வசதி குடியிருப்பு, ஓம்சக்தி நகர், பாரதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் 100க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

மாவட்ட சுகாதார துறையில் பணியாற்றும் ஊழியர் பற்றாக்குறையினால் நகர், கிராமப் பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியில் மந்தம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் சேதுபதி கூறுகையில், நகரின் பல இடங்களில் தேங்கி கிடக்கும் மழை நீரினால் கொசு உற்பத்தி அதிகரித்து உள்ளது.

கொசுக்கடியால் இரவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கம் இல்லாமல் தவித்து வருகின்றனர். மாவட்ட சுகாதார துறையினர் கொசுக்களை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அப்போதுதான் காய்ச்சலின் தீவிரம் குறையும் என்று கூறினார்.

Related Stories: