ராமநாதபுரம் நகர் பகுதியில் குற்றங்களை கண்காணிக்க கூடுதலாக 55 கேமராக்கள் எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா தகவல்

ராமநாதபுரம், டிச.6: ராமநாதபுரம் நகரில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகமாகி கொண்டிருக்கிறது. காலை, மாலை நேரங்களில் அரண்மனை, சாலைதெரு, அக்ரகாரம் ரோட்டில் டிராபிக் ஜாமில் சிக்கி மக்கள் திணறி வருகின்றனர். நகரில் பஸ் நிலையம், சர்ச் ஸ்டாப், கேணிக்கரை, சென்டர் பிளாக் போன்ற சந்திப்புகளில் மட்டுமே போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். குறிபிட்ட சில இடங்கள், சாலை சந்திப்புகளில் மட்டுமே போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். போக்குவரத்து மிகுதியாக உள்ள இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் ரோட்டில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்பவர்களையும், தடை செய்யப்பட்ட ஒரு வழிபாதையில் செல்லும் வாகனங்களையும் போலீசார் இருக்கும் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் கண்காணிக்க முடிவதில்லை.

இதுபற்றி எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா தெரிவிக்கையில், நகரில் போக்குவரத்து நெருக்கடியை கண்காணிக்கவும், கூட்ட நெரிசலில் ஏற்படும் நகை திருட்டு, வழிப்பறி, ஈவ்டீசிங்  போன்ற குற்றங்களை தடுக்கும் பொருட்டு கூடுதலாக 55 சிசிடிவி கேமராக்களை நகரில் வைக்கப்பட உள்ளது.

தற்போது நகரின் முக்கிய இடங்களில் 150 கேமராக்கள் உள்ளன. அவை அனைத்தும் பழுது நீக்கி லென்சுகளை சுத்தம் செய்து சாலையில் நடப்பவைகளை தெளிவாக தெரிவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து கேமரா பதிவுகளையும் எஸ்பி அலுவலகத்தில் நேரடியாக காண்பதற்காக நவீன சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் நகரில் உள்ள அனைத்து கேமராக்களையும் காணும் வகையில் டிஜிடல் டிவி வைக்கப்பட உள்ளது.

இதன் மூலம் குற்றச்செயலில் ஈடுபடுவோர் தப்பிச்செல்ல முடியாத வகையில் அடுத்தடுத்து செல்லும் இடங்களை கண்காணித்து பிடிக்க முடியும். தொடா்ந்து ஹெல்மெட் அணிய அறிவுறுத்துவதால் கடந்த ஆண்டை விட வாகன விபத்து குறைந்துள்ளது. ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை பற்றி மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Related Stories: