×

ஆதிதிராவிட நல மாணவர் விடுதி சாலையை சீரமைக்க கோரிக்கை

விருத்தாசலம், டிச. 6: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடத்தில் இயங்கி வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே ஆதிதிராவிட மாணவர்கள் விடுதி உள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி அருகேயுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த விடுதி கடந்த 2007ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது ரூ.31 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 10 அறைகளுடன் கூடிய 2மாடிகள் கட்டப்பட்டது. இந்நிலையில் விடுதியின் முன்பகுதி மற்றும் பின்பகுதி பராமரிப்பின்றி செடி, கொடிகள் வளர்ந்து விவசாய நிலம்போல் காட்சியளிக்கிறது. இதனால் விஷஜந்துக்கள் நடமாடும் பகுதியாக உள்ளது. மேலும் மாணவர்களுக்கு சாலை  வசதி, சுற்றுப்புற சுகாதார வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் இன்றி அவதியடைந்து வருகின்றனர். பள்ளிக்கும் விடுதிக்கும் சுமார் 10அடி தூரம் மட்டுமே உள்ள நிலையில் சுமார் 1கிலோ மீட்டர் தூரம் சுற்றி மாணவர்கள் சென்று வருகின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டும்போது, விடுதிக்கு போக நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. ஆனால் எந்தவித காரணமும் இன்றி நுழைவு வாயில் மூடப்பட்டதால் மாணவர்கள் நீண்ட தூரம் சென்று பள்ளிக்கு வருகின்றனர்.

மேலும் அப்பகுதி பொதுமக்கள் வசிப்பின்றி காட்டுப்பகுதியாக உள்ளதால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் மாணவர்கள் செல்லும் போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பாதையில் பொதுமக்கள் அதிகம் உபாதை கழித்து வருகின்றனர். இதனால் துர்நாற்றமும் அதிகம் வீசுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம்  பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Adi Dravida Welfare Student Pavilion Road ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது