×

வாசுதேவநல்லூரில் மாயமான குடிநீர் ெதாட்டி பள்ளி மாணவர்களின் தாகம் தீர்க்க மீண்டும் வைக்கப்படுமா?

சிவகிரி, டிச. 6:  வாசுதேவநல்லூரில் மாயமான குடிநீர் தொட்டியை பள்ளி மாணவர்களின் தாகம் தீர்க்கும் வகையில் மீண்டும் வைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். வாசுதேவநல்லூர் அருகே உள்ள நாரணபுரம் ஊராட்சியில் இருந்து வாசுதேவநல்லூருக்குள் வரும் மங்கம்மாள் சாலையில் சேனை விநாயகர் கோயில் தெரு, பனையடியான் கோயில் தெரு ஆகியன உள்ளன. பனையடியான் கோயில் தெருவில் சேனைத்தலைவர் சமுதாய நடுநிலைப்பள்ளி உள்ளது. இத்தெருக்கள் வாசுதேவநல்லூர் பேரூராட்சியின் 7வது வார்டில் வருகிறது. இந்த பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளியின் அருகே இரண்டு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, மோட்டார்கள் பொருத்தப்பட்ட வசதியுடன் இரண்டு சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் நிறுவப்பட்டன. இந்த இரண்டு தொட்டிகளும் இப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தன.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இரு தொட்டிகளும் பழுதடைந்து விட்ட நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு பள்ளி அருகே உள்ள தொட்டி மாயமானது. இதுதொடர்பாக இப்பகுதி மக்கள் நாரணபுரம் ஊராட்சியில் புகார் தெரிவித்தபோது சம்பந்தப்பட்ட பகுதி, வாசுதேவநல்லூர் பேரூராட்சிக்குட்பட்டது என தெரிவித்துள்ளனர். பேரூராட்சியில் புகார் செய்தார், ஊராட்சி பகுதி என்றுள்ளனர். இதையடுத்து இப்பகுதி மக்கள், தகவலறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்த போது, சம்பந்தப்பட்ட பகுதி நாரணபுரம் ஊராட்சிக்குட்பட்டது என தெரிய வந்தது. கடந்த 6 மாதங்களாக அலைக்கழிக்கப்பட்ட இப்பிரச்னையில் இனியாவது ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு மீண்டும் அதே இடத்தில் குடிநீர் ெதாட்டி அமைத்து மாணவர்களின் தாகம் தீர்க்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

Tags : Vasudevanallur ,drinking water school students ,
× RELATED வாசுதேவநல்லூரில் மமக நிர்வாகிகள் தேர்வு