×

பயன்பாட்டுக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் இருளில் மூழ்கி கிடக்கும் ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலம் மின்விளக்கு அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

ஏரல், டிச.6: ஏரல் தாமிரபரணி உயர்மட்ட ஆற்றுப்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து மூன்று ஆண்டுகளாகியும் இன்னும் மின்விளக்கு அமைக்கப்படாமல் இருளில் மூழ்கி கிடக்கிறது. இனியாவது காலம் தாமதிக்காமல் மின்விளக்கு அமைத்திட வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.     தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் மூன்றாவது பெரிய வணிகநகரமாக உள்ளது. வியாபாரம், தொழில் நிமிர்த்தமாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் ஏரல் வந்து செல்கின்றனர். தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வரும் போதெல்லாம் இங்குள்ள தாம்போதி பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து தடைப்பட்டு வந்தது.  இதையடுத்து அரசு நடவடிக்கை எடுத்து தாம்போதி பாலம் அருகிலேயே புதிய உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா திறந்து வைத்தார். ஆனால் இந்த பாலத்திற்கு இன்று வரை மின்விளக்கு அமைக்கப்படாமல் இருளில் மூழ்கி கிடக்கிறது. இந்த பாலத்தின் வடபக்கத்தில் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலுக்கு செல்லும் சர்வீஸ் ரோடு உள்ளது. இதேபோல் பாலத்தின் தென்புறத்தில் ரோடு இரண்டாக பிரிந்து கிழக்கு பக்கம் ரோடு குரும்பூருக்கும், மேற்கு பக்கம் ரோடு தென்திருப்பேரைக்கும் பிரிந்து செல்கிறது. இந்த பாலத்தில் மின்விளக்கு இல்லாததால் இந்த ரோடுகள் பிரிந்து செல்லும் இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரத்தில் பாலத்தில் நடந்து செல்பவர்கள் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி உடனடியாக ஏரல் ஆற்றுப்பாலத்திற்கு மின் விளக்கு அமைத்திட அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்; ஏரல் தாமிரபரணி ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு முன் கட்டப்பட்ட வைகுண்டம், ஆழ்வார்திருநகரி மற்றும் ஆத்தூர் பாலங்களில் எல்லாம் மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. ஏரல் ஆற்றுப்பாலம் கட்டியபின் சமீபத்தில் கட்டப்பட்ட கருங்குளம் பாலத்தில் கூட மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ள நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனம் செல்லும் ஏரல் ஆற்றுப்பாலத்தில் மட்டும் மின்விளக்கு இன்னும் அமைக்கப்படாமல் உள்ளது வேடிக்கையாக உள்ளது. மேலும் ஏரல் தனி தாலுகாவாக தற்போது செயல்பட்டு வரும் நிலையில் முன்பு இருந்ததைவிட கூடுதலாக இப்பகுதிக்கு மக்கள் வந்து செல்கிறார்கள். எனவே வியாபாரிகள், பொது மக்கள் நலன் கருதி இன்னும் காலத்தை கடத்தாமல் ஏரல் ஆற்றுப்பாலத்தில் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக மின்விளக்கு அமைத்திட வேண்டும்’ என்றனர்.

Tags : Ariel Thamiraparani River Power Station ,
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்