×

திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் கழுத்து அறுத்து மாணவியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் சிறை தண்டனை

திருவள்ளூர், டிச. 6:  சென்னை மணலி புதுநகரில் வசிப்பவர்கள் இன்பராஜ், கிருஷ்ணவேணி தம்பதி. இவர்களது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகில் திருவழுதிவிளை கிராமம் ஆகும். தொழில் நிமித்தமாக மணலி  புதுநகரில் பல வருடங்களுக்கு முன் இன்பராஜ், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியேறினார். மகள் அனுபாரதி (17) அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்தார். இன்பராஜின் உறவினர் கருவேலமுத்து மகன் ஜெயராமன் (23). இவர், தூத்துக்குடியில் இருந்து அவ்வப்போது  இன்பராஜின் வீட்டிற்கு வந்து தங்குவது வழக்கம். அப்போது தனக்கு அனுபாரதியை திருமணம் செய்து வைக்குமாறு  இன்பராஜூக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். ஆனால், பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் அனுபாரதிக்கு இன்னும் திருமண வயது வரவில்லை. அவள் கல்லூரி படிப்பை முடித்தபிறகு திருமணத்தை குறித்து யோசிக்கலாம் என  இன்பராஜ் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 17.03.2014 அன்று காலை இன்பராஜ் வீட்டுக்கு ஜெயராமன் வந்தார். அனுபாரதியை உடனே தனக்கு திருமணம் செய்துவைக்குமாறு கிருஷ்ணவேணியிடம் கூறியுள்ளார். அதற்கு, ‘’நீ வேலை இல்லாமல்  இருக்கிறாய். அனுபாரதியும் படித்துக்கொண்டு இருக்கிறாள். நீ குடும்பம் நடத்த தேவையான பணம் சம்பாதிக்கும் அளவுக்கு முதலில் வேலை தேடு. அதன்பிறகு அவளை திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை  செய்யலாம். அதுவரை தொந்தரவு செய்யவேண்டாம் என அறிவுரை அவரிடம் கிருஷ்ணவேணி கூறியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  அதன்பிறகு இருவரும் சமாதானம் அடைந்தனர்.அதன்பிறகு  காபி போடுவதற்காக கிருஷ்ணவேணி சமையல் அறைக்கு சென்றார்.

இந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஜெயராமன், ஏற்கனவே தயாராக மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து படுக்கை அறையில் இருந்த அனுபாரதியை பிடித்து சரமாரியாக குத்தினார். அத்துடன்  கழுத்தையும் அறுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஜெயபாரதி அலறியபடி சுருண்டு விழுந்தார். ஜெயபாரதியின் அலறலை கேட்டு சமையல் அறையில் இருந்து கிருஷ்ணவேணி வருவதை பார்த்ததும் ஜெயராமன் அங்கிருந்து  தப்பி ஓடினார். இதற்கிடையே அனுபாரதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், மணலி புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து, ஜெயராமனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.  இவ்வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி பரணிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏ.தனலட்சுமி ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி  பரணிதரன் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், ‘’பள்ளி மாணவி அனுபாரதியை சரமாரியாக கத்தியால் வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்த குற்றத்திற்காக, ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனையும், ₹5 ஆயிரம்  அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தணடனையும் விதிக்கப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதையடுத்து குற்றவாளி ஜெயராமனை போலீசார் பிடித்து புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : strangulation ,
× RELATED சிவகங்கை அருகே பரிகார பூஜைக்கு...